Home கலை உலகம் பிக்பாஸ்: பிந்துமாதவி மட்டுமா? இன்னும் வருகிறார்கள் பிரபலங்கள்!

பிக்பாஸ்: பிந்துமாதவி மட்டுமா? இன்னும் வருகிறார்கள் பிரபலங்கள்!

1183
0
SHARE
Ad

Bindu-Madhavi-கோலாலம்பூர் – பிக்பாஸ் வீட்டில் புதிய போட்டியாளராக நடிகை பிந்து மாதவி களமிறக்கப்பட்டிருக்கிறார்.

அதற்கான காரணம் என்னவென்று விஜய் தொலைக்காட்சி தகவல் எதையும் வெளியிடவில்லை.

ஹவுஸ்மேட்சுகளுக்கு பலக் கட்டுப்பாடுகளை விதிக்கும் விஜய் தொலைக்காட்சி, ஆரம்பம் முதல் அதனைப் பின்பற்றுவதில்லை.

#TamilSchoolmychoice

முதலில் 14 போட்டியாளர்கள் என்று 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கமல்ஹாசனை வைத்து விளம்பரம் செய்தது.  ஆனால் நிகழ்ச்சியின் முதல் நாள் அன்று திடீரென்று 15 போட்டியாளர் என்று நமீதாவை இணைத்தது.

யாருக்கும் பாரபட்சமின்றி நடந்து கொள்வதாகக் கூறிவிட்டு, காயத்ரியின் சர்ச்சையான ‘சேரி பிஹேவியர்’ வார்த்தையை மட்டும் சென்சார் செய்து ஒளிபரப்பியது.

இது ஒருபுறம் இருக்க, காயத்ரியை மட்டும் கமல்ஹாசன் கேள்வி கேட்டுத் துளைக்காமல், மேலோட்டமாக நடத்தி வருவதும் தெரிகின்றது.

இந்நிலையில், நிகழ்ச்சி கிட்டத்தட்ட 30 நாட்களுக்கும் மேல் கடந்து விட்ட நிலையில், விஜய் தொலைக்காட்சி எந்த ஒரு காரணமும் சொல்லாமல் பிந்து மாதவியை போட்டியில் புதிதாக இணைத்திருக்கிறது.

தான் தொடர்ந்து நிகழ்ச்சியைப் பார்த்து வருவதாகவும், ஓவியா தான் தனக்கு போட்டியாளராக இருப்பார் என்றும் நடிகை பிந்து மாதவி, கமலிடம் கூறியதைப் பார்க்கும் போது, அவருக்கு நிகழ்ச்சியின் சூட்சமம் நன்கு புரிந்திருக்கிறது என்றே தெரிகிறது.

என்ன செய்தால் மக்களிடம் கைதட்டல் கிடைக்கும்? என்ன செய்தால் மக்கள் தன்னை வெறுப்பார்கள்? என்பதை கடந்த 1 மாத நிகழ்ச்சியைப் பார்த்த பிந்து மாதவியால் நன்கு புரிந்து கொள்ள முடியும். பிறகு எப்படி அவர் நிகழ்ச்சியில் உண்மையாக நடந்து கொள்வார்?

மேலும், ஓவியாவிற்கு மக்களிடம் தற்போது கிடைத்திருக்கும் மிகப் பெரிய வரவேற்பினைத் தணிக்கவே பிந்துமாதவி இணைக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகின்றது.

இதனிடையே, பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவலில், பிந்து மாதவி மட்டுமல்ல இன்னும் சில பிரபலங்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வருவார்கள் என்று தெரிவித்திருக்கிறது.

இதற்கு முன்பு, விஜய் டிவியில், நடிகர் அரவிந்த் சுவாமி தொகுத்து வழங்கிய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சி, ஆரம்பத்தில் பொதுமக்கள் கலந்து கொண்ட போது மிக சுவாரசியமாகப் போய் கொண்டு இருந்தது. ஆனால் இடையில் வரிசையாகப் பிரபலங்கள் கலந்து கொள்ளத் தொடங்கிய பின்பு அவர்கள் தொடர்ச்சியாக ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டுமே ஜெயித்து வந்ததை அந்நிகழ்ச்சியை நன்கு கவனித்தவர்கள் அறிவார்கள்.

அதேபோல், தற்போது மிகவும் சுவாரசியமாகப் போய் கொண்டிருக்கும் பிக்பாஸ், அடுத்தடுத்த பிரபலங்களின் வருகையால், தீவிரத்தன்மை இழந்து வீரியம் குறைந்து போகவும் வாய்ப்பிருப்பதாக ரசிகர்கள் பலர் இணையதளங்களில் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.