கோலாலம்பூர் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவின் வம்சாவளி குறித்து துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி கூறியது மிகத் துல்லியமானது என துணை உள்துறை அமைச்சர் நூர் ஜஸ்லான் தெரிவித்திருக்கிறார்.
“அவரின் (மகாதீரின்) பல்கலைக்கழகப் பதிவேட்டில், என்ன பெயரை அவர் பயன்படுத்தியிருக்கிறார்? தேசியப் பதிவிலாகாவிடம் அந்த விவரங்கள் உள்ளன”
“மகாதீர் எப்போது பிறந்தார்? எப்போது நமது நாடு ‘பின்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தொடங்கியது?.. அவர் சுதந்திரத்திற்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பிறந்திருக்கிறார்” என்று ‘தி சன்’ இணையதளத்திற்கு அளித்திருக்கும் பேட்டியில் நூர் ஜஸ்லான் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் சாஹிட், மகாதீர் குறித்துக் கூறுகையில், மகாதீர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், அவரது தந்தையார் கேரளாவில் இருந்து மலேசியாவிற்கு வந்தவர் என்றும் தெரிவித்தார்.
மேலும், மகாதீரின் பழைய அடையாள அட்டையையும் தான் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
சாஹிட்டின் இந்தக் கருத்து மகாதீர் ஆதரவாளர்களிடையே கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
தனி நபரின் அடையாள அட்டை விவரங்களைப் பொதுவில் வெளியிட்ட சாஹிட் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜசெக உள்ளிட்ட கட்சிகள் புகார் அளித்தன என்பது குறிப்பிடத்தக்கது.