மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நாட்டின் 529-வது தமிழ்ப் பள்ளிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்தப் பள்ளி அமைவதற்காக சுங்கை சிப்புட்டைச் சேர்ந்த தியாகராஜன் சொக்கலிங்கம் இந்தப் பள்ளிக்கான நடவடிக்கைக் குழுத் தலைவராக இருந்து பல்வேறு வகைகளிலும் பாடுபட்டார்.
பள்ளிக்கான உத்தரவாதக் கடிதமும், நிர்மாணிப்புப் பணிகளுக்கான காசோலையும் வழங்கும் நிகழ்ச்சி கடந்த ஜூன் 19-ஆம் தேதி கோலாலம்பூரில் நடைபெற்றது. டாக்டர் சுப்ரா ஹீவுட் தமிழ்ப் பள்ளியின் நடவடிக்கைக் குழுத் தலைவர் தியாகராஜனிடம் இந்த ஆவணங்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. மஇகா பிரமுகர்களும், சுற்றுவட்டார மக்களும், திரளாகக் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரும் பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்தவருமான மைக்கல் ஜெயகுமார், ஜசெகவின் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், பத்து கவான் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பட்டு ஆகியோரும் கலந்து கொண்டனர்.
சுங்கை சிப்புட் ஹீவுட் தமிழ்ப் பள்ளி புதிதாக நிர்மாணிக்கப்படும் நாட்டின் 529 தமிழ்ப் பள்ளியாகும். சுமார் 6 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்படும் இந்தப் பள்ளி அடுத்த 12 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 12 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படவிருக்கும் இந்தப் பள்ளி திட்டமிட்டபடி கட்டி முடிக்கப்பட்டு, 2019 ஆண்டு முதல் மாணவர்கள் தங்களின் கல்வியை இந்தப் பள்ளியில் தொடங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.