Home நாடு ‘மகாதீர் பின்னால் சாஹிட் போயிருக்கமாட்டார்’ – நஜிப் கூறும் காரணம்!

‘மகாதீர் பின்னால் சாஹிட் போயிருக்கமாட்டார்’ – நஜிப் கூறும் காரணம்!

692
0
SHARE
Ad

Mahathir-Najibகோலாலம்பூர் – துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடி பற்றி தனக்கு நன்றாகத் தெரியும் என்றும், மகாதீர் கூறுவது போல் நிச்சயமாக அவர் தனக்கு எதிராக எந்த ஒரு கீழறுப்பு வேலைகளையும் செய்திருக்க மாட்டார் என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

மேலும், மகாதீர் பிரதமராக இருந்த போது, சாஹிட்டை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தில் (ஐஎஸ்ஏ) கைது செய்து, ‘தலையில் துப்பாக்கி வைப்பது போல்’ நடத்தினார் என்பதையும் சாஹிட் நன்றாக அறிவார் என்றும் நஜிப் குறிப்பிட்டிருக்கிறார்.

“அவர் (மகாதீர்) தனது முழு அதிகாரத்தை (சாஹிட்டுக்கு எதிராகப்) பயன்படுத்தினார். அது தலையில் துப்பாக்கி வைப்பது போன்றது”

#TamilSchoolmychoice

“அதனால் தான் சாஹிட்டால் அதனை மறக்க முடியவில்லை. அதனால் தான் மகாதீரைச் சந்தித்து துணைப் பிரதமர் ஆதரவு கேட்டார் என்பது நம்பும் படியாகவே இல்லை”

“அது நடக்காது மற்றும் பொய்யானது. அது ஒரு அவதூறு” என்று ஷா ஆலமில் நடைபெற்ற அம்னோ தொகுதி பேராளர்கள் கூட்டத்தில் நஜிப் தெரிவித்திருக்கிறார்.

அண்மையில், மகாதீர் தனது வலைத்தளத்தில் வெளியிட்ட தகவலில், துணைப்பிரதமரான பின்னர், சாஹிட் தன்னைச் சந்தித்து, நஜிப்பை பதவியிலிருந்து நீக்குவதற்காக ஆதரவு கேட்டதாகத் தெரிவித்திருந்தார்.

இதனை சாஹிட் முற்றிலும் மறுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.