கோலாலம்பூர் – சிலாங்கூர் பல்கலைக்கழகத்திற்கும், அதன் ஒப்பந்ததார நிறுவனமான ஜனா நியாகா செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் இடையே ஏற்பட்ட சர்ச்சை காரணமாக, சிலாங்கூர் அம்னோ இளைஞர் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை சிலாங்கூர் மந்திரி பெசார் மற்றும் மந்திரி பெசார் ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்கு எதிராக எம்ஏசிசி-ல் புகார் அளித்திருக்கிறது.
மந்திரி பெசார் ஒருங்கிணைப்பு நிறுவனத்திற்கும், சிலாங்கூர் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் துணை நிறுவனமான பெண்டிடிகான் ஒய்எஸ் செண்ட்ரியான் பெர்ஹாட் நிறுவனத்திற்கும் அஸ்மின் அலி தான் பொறுப்பு என்று கிளானா ஜெயா அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் மாய்ஷாம் மாரோப் தெரிவித்திருக்கிறார்.
எனவே சிலாங்கூர் லீக்ஸ்.காம் என்ற இணையதளத்திலிருந்து பல்வேறு ஆவணங்கள் வெளியாக, யுனிசெல் மற்றும் ஜனா நியாகா இடையிலான தகராறு தான் காரணமாக இருக்கும் என்ற பெரிய சந்தேகம் எழுந்திருக்கிறது என்றும் மாய்ஷாம் குறிப்பிட்டிருக்கிறார்.
அதன் படி, இன்று காலை 11 மணியளவில், மாய்ஷாம், ஷா ஆலம் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணைய அலுவலகத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் வருகை புரிந்து அஸ்மினுக்கு எதிராகப் புகார் அளித்தார்.
ஜனா நியாகா என்ற நிறுவனத்திற்கு, மந்திரி பெசார் ஒருங்கிணைப்பு அலுவலகத்திலிருந்து பல்வேறு பணப் பரிமாற்றங்கள் நடந்திருப்பதை சிலாங்கூர் லீக்ஸ்.காம் அண்மையில் வெளியிட்டது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர், பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் துணைவியார் டத்தின் ரோஸ்மா மான்சோரின் தனிப்பட்ட செயலாளர் ரிசால் மான்சோர், அஸ்மின் அலி அந்த பணப் பரிமாற்றங்கள் குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.