கோலாலம்பூர் – இந்திய சமூகப் பொருளாதாரா மேம்பாட்டுப் பிரிவு (செடிக்) ஆதரவுடனும் மலேசிய சமுக,கல்வி அறவரியம், மலேசிய உத்தமம் அமைப்புடன் இணைந்து கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கம் வழி நடத்தும் தேசிய ரீதியிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்பப் போட்டி கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி சனிக்கிழமை மலாயா பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் தலைவரும் கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஆலோசகருமான குணசேகரன் கந்தசுவாமி வரவேற்புரை ஆற்றினார்.
குணசேகரன் கந்தசுவாமி தமது உரையில் கூறியதாவது:-
“கடந்த ஒரு மாதமாக மாநில நிலையில் நடத்தப்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற 84 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 258 மாணவர்கள் தேசிய நிலை போட்டிகளில் பங்கு கொள்கின்றனர்”
“மேலும், மாநில நிலையிலான போட்டிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளைப் பிரதிநிதித்து 1100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு பல நிலைகளில் தங்களது திறன்களையும் அனுபவங்களையும் பெருக்கிக் கொண்டனர்”
“அதேவேளையில், இப்போட்டிகளில் தமிழ்ப்பள்ளிகள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் பங்கேற்பு ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருவது வரவேற்கத்தக்கது. தித்தியான் டிஜிட்டல் திட்டத்தின் கீழ் நாடு முழுவதுமுள்ள சுமார் 60 தமிழ்ப்பள்ளிகளில் கணினி நடுவங்களில் கற்றல் கற்பித்தல் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது”
“கடந்த 9 ஆண்டுகளாக இத்திட்டம் முறையான பாடத் திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரமும் ஏறத்தாழ 22,000 தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு நடைபெறும் வகுப்புகளில் அடிப்படை அலுவலக மென்பொருள் பயன்பாடு தொடங்கி நிரலாக்க மொழி வரையிலான பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தகவல் தொடர்பு தொழில்நுட்பத் திறனறிவைப் பெறுகின்றனர்.”
“இருப்பினும் இந்த 22,000 என்பது மொத்த தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கையில் வெறும் 25 விழுக்காடு மட்டுமே. மேலும், 25 விழுக்காட்டு மாணவர்களுக்கு பிற அமைப்புகள் தகவல் தொடர்பு தொழில்நுட்ட திறனை வழங்கும் நிலையில் மேலும் 50 விழுக்காடு மாணவர்கள் இன்னும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அறிவைப் பெறாமலே இருக்கின்றனர்.”
“மலேசிய இந்தியர் பெருந்திட்டத்தில் தரமான தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கற்றலை நோக்கி தமிழ்ப்பள்ளி மாணவர்களை முன்நகர்த்துவது முதன்மை குறிக்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு தித்தியான் டிஜிட்டல் திட்டம் தனது நிபுணத்துவ உதவிகளை வழங்கத் தயாராக உள்ளது. ஆகவே, மலேசிய இந்தியர் பெருந்திட்ட கல்விப் பிரிவுடன் தரமான தகவல் தொடர்பு தொழில்நுட்பக் கல்வியை மாணவர்களுக்கு கொண்டு அவர்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை எதிர்ப்பார்க்கிறேன்” – இவ்வாறு குணசேகரன் கந்தசுவாமி தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இந்திய சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவு (SEDIC)-ன் தலைமை இயக்குநர் பேராசிரியர் டத்தோ முனைவர் என்.எஸ். இராஜேந்திரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
என்.எஸ். இராஜேந்திரன் தமது உரையில் கூறியதாவது:-
“21-ஆம் நூற்றாண்டில் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் இன்றியமையாத ஒன்றாகும். அவ்வகையில், தித்தியான் டிஜிட்டல் திட்டம் தமிழ்ப்பள்ளிகளில் செயல்படுத்தப்படுவது பல்வேறு நன்மைகளைக் கொண்டு வரும் என்பது திண்ணம். அதோடு, இதுபோன்ற போட்டிகள் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாக அமையும் என உறுதியாக நம்பலாம்”
“உலகில் அதிக வருமானத்தை தேடித் தரும் ஒரு துறையாக தகவல் தொடர்பு தொழில்நுட்பம் விளங்குகிறது. உலக ரீதியில் இந்திய வம்சாவளியினர் இத்துறையில் சிறந்து விளங்குகின்றனர். அந்த வகையில் நமது தமிழ்ப்பள்ளி மாணவர்களும் அதற்கு சளைத்தவர்களல்ல. அவர்களுக்கு, சரியான வாய்ப்பும் வசதியும் ஏற்படுத்தி தரும் பட்சத்தில் அவர்களும் சிறந்த நிலையை அடைவார்கள். இத்திட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளும்” – இவ்வாறு என்.எஸ். இராஜேந்திரன் தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற தரமான திட்டங்களுக்கு செடிக் தொடர்ந்து ஆதரவளிக்கும் என பேராசிரியர் குறிப்பிட்டார். மக்கள் பணத்தில் நடத்தப்படும் இதுபோன்ற முறையாக நிர்வகிப்பட்டு, தேவையாக திட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு இலக்கை சென்றடைய வேண்டும் என அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.
இந்திய சமூகத்தினர் பொழுதுபோக்கு அம்சங்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை கல்வி, பொருளாதார, சமூகவியல் வளைர்ச்சிக்கு ஒப்பான அம்சங்களுக்கும் வழங்குவதன் வாயிலாக சமூக வளர்ச்சியையும் உருமாற்றத்தையும் உறுதிசெய்ய முடியும் என நம்பிக்கையளித்தார். சாடுதல்கள் எதுவுமின்றி மிகச் சிறிய அளவிவேயானாலும் ஒவ்வொரு தனிமனிதனும் தன்னாலானா பங்களிப்பை சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என சுவாமி விவேகாந்தரின் பொன்மொழிகளிலிருந்து மேற்கோள் காட்டினார்.
பிறமொழிப் பள்ளிகளுக்கு ஈடாக தமிழ்ப்பள்ளிகள் அனைத்து நிலைகளிலும் தொடர் வளர்ச்சியைக் காட்டி வருவதை பிரதமரின் உரையிலிருந்துச் சுட்டிக்காட்டிய பேராசிரியர் டத்தோ டாக்டர் என்.எஸ். இராஜேந்திரன், கல்வி, புறப்பாட நடவடிக்கைகள் என அனைத்திலும் நல்ல அடைவு நிலையை மேம்படுத்த வேண்டியுள்ளதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார். மேலும், தித்தியான் டிஜிட்டல் திட்ட குழு PTST மூலமாக கல்வி அமைச்சுடன் இணைந்து நாடு முழுவதும் தமிழ்ப்பள்ளிகளில் கணினி வசதிகளைத் துரிதப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதை வரவேற்றார்.
தேசிய அளவிலான தகவல் தொடர்புத் தொழில்நுட்ப போட்டி முடிவுகள்
1.தகவல் தொடர்பு தொழில்நுட்ப அறிவுப் புதிர் போட்டி (ICT Quiz)
முதல் நிலை: தேசிய வகை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, (Ruhan Sri Rama)
இரண்டாம் நிலை: தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி, (Uma Mageswary Anbalagan)
மூன்றாம் நிலை: தேசிய வகை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, (Saakthivel Selvam)
2. வரைதல் போட்டி
முதல் நிலை: தேசிய வகை சென் தேரேசா, (Shivaneswary Anantha Jothy)
இரண்டாம் நிலை: தேசிய வகை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, (Heyshika Krishna Kuna)
மூன்றாம் நிலை: தேசிய வகை வட்சன் தமிழ்ப்பள்ளி (Keeshigah Padamanathan)
3.ஸ்க்ராட்ச் போட்டி
முதல் நிலை: தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளி, (Dinesh Nanthakumar)
இரண்டாம் நிலை: தேசிய வகை செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (Thavaanesha Pillai Kesavan)
மூன்றாம் நிலை: தேசிய வகை செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி, (Jay Agil Yoogan Ramasamy)
4.அகப்பக்க வடிவமைத்தல்
முதல் நிலை: தேசிய வகை சூன் லீ தமிழ்ப்பள்ளி (Laveneyah Ariyamelai)
இரண்டாம் நிலை: தேசிய வகை ரீனி தமிழ்ப்பள்ளி (Pravin Shanker)
மூன்றாம் நிலை: தேசிய வகை ரீனி தமிழ்ப்பள்ளி (Anisha Kesavan)
5.இருபரிமான அசைவூட்ட வடிவமைத்தல் போட்டி
முதல் நிலை: தேசிய வகை சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, (Jaysrri Thevasegamani)
இரண்டாம் நிலை: தேசிய வகை வட்சன் தமிழ்ப்பள்ளி (Cynthia Ellyster Jason)
மூன்றாம் நிலை: தேசிய வகை வட்சன் தமிழ்ப்பள்ளி (Krithigaa Padamathan)