Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘விஐபி 2’ – புதிய எதிரியுடன் ரகுவரன்! சுவாரசியம் மிகக் குறைவு!

திரைவிமர்சனம்: ‘விஐபி 2’ – புதிய எதிரியுடன் ரகுவரன்! சுவாரசியம் மிகக் குறைவு!

1438
0
SHARE
Ad

VIP-2கோலாலம்பூர் – ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் கதையோடு ஒன்ற வேண்டும் என்றால், முந்தைய பாகத்தை கட்டாயம் பார்த்தே ஆக வேண்டும் என்பதைப் போல், அதே வீடு, அதே பைக், அதே கதாப்பாத்திரங்கள் என அப்படியே எல்லாம் வைக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு எல்லோரையும் மீண்டும் சந்திப்பது போல் இருக்கிறது.

முதல் பாகத்தை வேல்ராஜும், இரண்டாம் பாகத்தை சவுந்தரியா ரஜினிகாந்தும் இயக்கியிருந்தாலும், கூட, இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் எதுவும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அந்த அளவிற்கு திரைக்கதையும், வசனமும், இயக்குமும் தனுஷ் சொல்படியே கேட்டிருக்கிறது.

கதைப்படி, முதல் பாகத்தில் வெட்டி ஆபீசராக இருந்த தனுஷ், அனிதா கன்ஸ்டிரக்சன்ஸ் நிறுவனத்தில் எஞ்சினியராக வேலைக்குச் சேர்ந்தார் அல்லவா? இந்த பாகத்திலும் அங்கு தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். நல்ல கட்டிடங்கள் கட்டியதற்காக சிறந்த எஞ்சினியர் விருதெல்லாம் வாங்குகிறார்.

#TamilSchoolmychoice

இப்படி போய் கொண்டிருக்கும் தனுஷ் வாழ்க்கையில் புதிய எதிரியாக உருவெடுக்கிறார், திமிரும், ஆணவமும் நிறைந்த வசுந்த்ரா கன்ஸ்டிரக்சன்ஸ் நிர்வாகி கஜோல்.

ஒரு பக்கம் வீட்டில் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் மனைவி அமலாபாலையும் சமாளித்துக் கொண்டு, அவ்வப்போது இறந்து போன அம்மா சரண்யாவின் நினைப்பிலும் கண்ணீர் விட்டுக் கொண்டு, தனது எதிரி கஜோலை எப்படி தொழில் ரீதியாக எதிர்கொண்டு சவால்களைக் கடந்து வருகின்றார் தனுஷ் என்பது தான் ‘வேலையில்லா பட்டதாரி 2’ திரைப்படத்தின் கதை.

முதல் பாதியில், குடும்பச் சண்டை, அம்மா செண்டிமெண்ட், அப்பா அறிவுரை என பல இடங்களில் தனுஷ் சிக்கிக் கொண்டு தள்ளாடும் போதெல்லாம், ‘யப்பா.. போதும்பா.. இத தான் டெய்லி சீரியல்ல பார்க்குறோமே.. மேட்டருக்கு வாங்கப்பா’ என்று சொல்லும் அளவிற்கு அவ்வளவு அலுப்பு.

இந்த முறை அமலாவுக்கு பதில் சமுத்திரக்கனியை அறிவுரை சொல்லவும், தனுஷை அதட்டுவதற்கு அமலாவையும் உல்டாவாக மாற்றியிருக்கிறார்கள்.

அதே இரட்டை அர்த்த நகைச்சுவையை விவேக்கும், செல் முருகனும் இந்தப் பாகத்திலும் சிறப்பாகத் தொடர்ந்திருக்கிறார்கள்.

இப்படியாகப் படம் அதே ‘பழைய’ சமாச்சாரங்களால் போரடிக்கும் சமயத்தில் எல்லாம், படையப்பா நீலாம்பரிக்கு இணையாக, ஸ்டைலும், அழகுமாக வந்து திமிரோடு பேசும் கஜோல் தான் ஓரளவு படத்தை சுவாரசியமாக்குகிறார்.  ஆங்கிலக் கெட்டவார்த்தைகள் நிறைய முறை பேசுகிறார்.

kajolசட்டென, இரண்டாம் பாதியில் தனுஷுக்கு ஒரு பிரச்சினை வந்து ‘விஜபி கன்ஸ்டிரக்சன்ஸ்’ உருவான பின்னர் தான் நிமிர்ந்து உட்காரத் தொடங்குகிறோம். அங்கிருந்து திரைக்கதை சற்று வேகமெடுத்து ரசிகர்களை ஓரளவு திருப்தி படுத்துகிறது.

கிளைமாக்ஸ் நிச்சயம் எதிர்பார்க்காத ஒன்று. கஜோலுக்கும், தனுஷுக்கும் இடையிலான அந்த சுமார் 15 நிமிடக் காட்சிகளில், சந்தோஷம், துக்கம், ரசனை எல்லாமே இருக்கிறது.

ஆனால், அங்கிருந்து படம் உச்சத்தைத் தொடப் போவதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது படம் முடிந்துவிடுவதாகக் காட்டுவது பெரிய ஏமாற்றம் தான்.

சீன் ரோல்டனின் இசை கேட்க நன்றாக இருக்கிறது. ஆனால் படத்தின் முடிவில் முந்தைய பாகத்தில் அனிருத் போட்ட பாட்டு இப்போதும் ஆட்டம் போட வைக்கிறது. சமீர் தாஹிரின் ஒளிப்பதிவு அருமை.

என்றாலும், முந்தைய பாகத்தில், இருந்த சுவாரசியங்கள், நவீன தொழில்நுட்பங்களின் இணைப்புகள், எதிரியைச் சமாளிக்கும் சவால்கள் போன்றவை இப்பாகத்தில் மிகவும் குறைவாகவே இருக்கிறது.

படத்தில் தனுஷ், அம்மா செண்டிமெண்ட் பற்றி பேசும் போதெல்லாம் அதை கிண்டல் செய்து அங்கிருந்து நகர்ந்துவிடுவார் சமுத்திரக்கனி.

அதேபோல், இதற்கு மேலும், அந்த பழைய மோட்டார் சைக்கிளில் காய்கறி வாங்குவது, மொட்டமாடிக்குப் போய் உட்காருவது, தண்ணி அடித்துவிட்டுப் புலம்புவது போன்றவற்றை தனுஷ் சொல்லிக் கொண்டிருந்தால் ரசிகர்களாலும் திரையரங்கில் உட்கார முடியாது என்றே தோன்றுகிறது.

-ஃபீனிக்ஸ்தாசன்