Home கலை உலகம் மலேசியாவில் ‘விவேகம்’- நேஷன் பிலிம் ஸ்டூடியோ வெளியிடுகிறது!

மலேசியாவில் ‘விவேகம்’- நேஷன் பிலிம் ஸ்டூடியோ வெளியிடுகிறது!

935
0
SHARE
Ad

vivegam-posterகோலாலம்பூர் – சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் தல அஜித்குமார் நடித்திருக்கும் ‘விவேகம்’ திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகவிருக்கும் இத்திரைப்படத்திற்கு, அஜித் ரசிகர்கள் மத்தியில் வழக்கமாக இருக்கும் எதிர்பார்ப்பை விட பல மடங்கு கூடுதலாகக் காணப்படுகின்றது.

அதற்கு, இந்தப் படத்தில் அஜித்தின் கடுமையான உழைப்பும், அற்பணிப்பும் தான் காரணம் என சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவி வருகின்றது.

#TamilSchoolmychoice

இராணுவம் சம்பந்தப்பட்ட கதையாக இருப்பதால், முற்றிலும் பனிப்பிரதேசங்களில் படமாக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்திற்காக அஜித் கட்டுடலாக மாறியிருப்பதோடு, மிகவும் கஷ்டப்பட்டு பல சவாலான ஸ்டண்ட் காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

மலேசியாவில் நேஷன் பிலிம் ஸ்டூடியோ வெளியீடு

‘விவேகம்’ திரைப்படத்தை மலேசியாவில் நேஷன் பிலிம் ஸ்டூடியோ நிறுவனம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்கின்றது. அதற்கான உரிமத்தை வாங்கியிருக்கிறது.

இது குறித்து அண்மையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், நேஷன் பிலிம் ஸ்டூடியோ நிர்வாகி ஜைனுல் அலாம் அப்துல் காதர், பெருநிறுவன விவகாரங்களின் உதவித் தலைவர் ஷெரீன் முருகேஸ்,  எம்எஸ்கே நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாரதா சிவலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

நாடெங்கிலும் சுமார் 500 திரையரங்குகளில் ‘விவேகம்’ திரைப்படம் வெளியிடப்படவிருக்கிறது என்றும், நேஷன் பிலிம் ஸ்டூடியோ பேனரிலேயே புரூனே, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனிசியா உள்ளிட்ட நாடுகளிலும் திரையிடப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் நேஷம் பிலிம் ஸ்டூடியோவின் நிர்வாக இயக்குநர் ஜைனுல் அலாம் அப்துல் காதர் தெரிவித்தார்.

Vivegampcமேலும், முதல் முறையாக மலேசியாவில் தமிழ்த் திரைப்படம் ஒன்றை வெளியீடு செய்யும் தங்களுக்கு அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக இணைந்திருக்கும் எம்எஸ்கே பிலிம்ஸ் மிகவும் உதவியாக இருப்பதாகவும் ஜைனுல் அலாம் அப்துல் காதர் குறிப்பிட்டார்.

அதனை ஆமோதித்த எம்எஸ்கே பிலிம்ஸ் நிர்வாகி சாரதா சிவலிங்கம், “நேஷன் பிலிம் ஸ்டூடியோவுக்கு நாங்கள் எங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றோம். இதில் போட்டி எதுவும் இல்லை. அறிவார்ந்த மக்களும், திறமையானவர்களும் எப்போதுமே களத்தில் வெற்றியடைவார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும் பேசிய ஜைனுல், மலேசியக் கலைஞரான யோகிபியின் பங்களிப்பு இத்திரைப்படத்தில் இருப்பதாலும், மலேசியாவில் தல அஜித்திற்கு இருக்கும் மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் காரணமாகவும் தாங்கள் இத்திரைப்படத்தை மலேசியாவிற்குக் கொண்டு வந்ததாகவும் ஜைனுல் அலாம் அப்துல் காதர் தெரிவித்தார்.

27-ம் தேதி பிரம்மாண்ட விழா

மலேசியாவிலுள்ள அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிபடுத்தும் வகையில், வரும் ஆகஸ்ட் 27-ம் தேதி, ‘விவேகம்’ திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு பிரம்மாண்ட விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறது நேஷன் பிலிம் ஸ்டூடியோ.

அவ்விழாவில், ‘விவேகம்’ திரைப்படத்தில் நடித்திருக்கும் காஜல் அகர்வால், அக்‌ஷராஹாசன், விவேக் ஓபுராய் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்றும் ஜைனுல் அலாம் அப்துல் காதர் தெரிவித்தார்.

மேலும், அஜித் புகைப்படம் பொறித்த டிஷர்ட்கள் விற்பனை விரைவில் தொடங்கப்படவிருப்பதாகக் குறிப்பிட்ட ஜைனுல், அஜித் ரசிகர்கள் வசதியாகப் படம் பார்த்துவிட்டு பாதுகாப்பாக வீடு திரும்ப ‘ஈவோம்’ டேக்சி நிறுவனத்துடன் இணைந்து 50 ரிங்கிட்டுக்கான பயணக் கூப்பன்களும் ரசிகர்களுக்கு வழங்கப்படவிருப்பதாகவும் ஜைனுல் குறிப்பிட்டார்.

‘விவேகம்’ திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வத் தகவல்கள், மலேசியாவில் டிக்கெட் விற்பனை குறித்த விவரங்கள் உள்ளிட்டவைகளை ‘நேஷன் பிலிம் ஸ்டூடியோவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தின் வாயிலாக ரசிகர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் நேஷன் பிலிம் ஸ்டூடியோ அறிவித்திருக்கிறது.

-ஃபீனிக்ஸ்தாசன்