பகாங் – ஒவ்வொரு ஆண்டும், ஆகஸ்ட் 12-ம் தேதி, ‘உலக யானைகள் தினம்’ அனைத்துலக அளவில் கொண்டாடப்பட்டு வருகின்றது.
இந்த நாளில் உலக அளவில், பல்வேறு அமைப்புகளால், யானைகளின் பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மலேசியாவில் பகாங் மாநிலம் கோல கண்டாவில் அமைந்திருக்கும் தேசிய யானைகள் சரணாலயம் குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த மலேசியாவில் உள்ள எக்சிம் வங்கி (EXIM Bank) பல ஆக்ககரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.
கோல கண்டா தேசிய யானைகள் சரணாலயம், தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏறக்குறைய 112 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது.
அங்கு, பெருநிறுவன சமூக நடவடிக்கைகளின் அடிப்படையில், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி முதல் இன்று 12-ம் தேதி வரையில், யானைகளின் குணாதிசியங்கள், அவைகளின் இயற்கை பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய சுமார் 20,000 பதாகைகளை ஆங்கிலம், மலாய் என இரு மொழிகளில் அச்சிட்டு விளம்பரம் செய்திருக்கிறது எக்சிம் வங்கி.
அதேவேளையில், தேசிய யானைகள் சரணாலயத்தைப் புதுபிக்க உதவியிருப்பதோடு, அங்கு பராமரிக்கப்பட்டு வரும் கால் இழந்த யானைக்கு செயற்கைக் காலையும் வழங்கியிருக்கிறது.
கோல கண்டா தேசிய யானைகள் காப்பகத்தைப் பொறுத்தவரையில், மூன்று விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
ஒன்று, வனங்களில் பாதிக்கப்பட்ட யானைகளை மீட்டு, அவற்றுக்கு உரிய சிகிச்சையளித்து வேறு இடங்களுக்கு மாற்றுதல், இரண்டு, தாயை இழந்த யானைக் குட்டிகளை மீட்டு அவற்றைப் பாதுகாத்தல், மூன்று, ஊனமுற்ற யானைகளை காப்பகத்தில் வைத்துப் பராமரித்தல் என இம்மூன்று பணிகளைச் செய்து வருகின்றது.
கடந்த வியாழக்கிழமை தேசிய யானைகள் சரணாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய எக்சிம் வங்கியின் தலைவர் டத்தோ மாட் நூர் நாவி, இதுவரை எந்த ஒரு பெருநிறுவனமும் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும், எக்சிம் வங்கி தான் முதல் முறையாக தங்களது சமூக விழிப்புணர்வு செயல்பாடுகளின் ஒருபகுதியாக இத்திட்டத்தைச் செயல்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.
(எக்சிம் வங்கியின் தலைவர் டத்தோ மாட் நூர் நாவி, 10 ஆகஸ்ட் 2017)
“இந்த ஒருமுறை மட்டுமல்ல எக்சிம் வங்கி தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு கொண்டே தான் இருக்கும். குறிப்பாக, மக்களுக்கு இங்கிருக்கும் யானைகள் சரணாலயம் பற்றிய விழிப்புணர்வு வேண்டும். வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வரும் மக்கள் கோல கண்டா யானைகள் சரணாலயம் பற்றி தெரிந்து இங்கு வந்து பார்வையிட்டுச் செல்கிறார்கள். அதேபோல் மலேசியாவில் இருக்கும் மக்களும் இங்கு வந்து பார்வையிட்டு, தங்களால் ஆன பங்களிப்பை செய்து மலேசியாவில் உள்ள யானைகளைப் பாதுகாக்க வேண்டும்”
“நமது சுற்றுச்சூழலையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க மக்கள் அது குறித்த விழிப்புணர்வை அடைவதோடு, வனங்களையும், வனவிலங்குகளையும் நேசிக்க வேண்டும். கடந்த ஆண்டு எக்சிம் வங்கி தேசிய மிருகக்காட்சி சாலைக்கு தென்னாப்பிரிக்காவில் இருந்து இரண்டு அரிய வகை கிளிகளை வாங்கிக் கொடுத்தது. அவை எக்சிம் வங்கியின் சின்னத்தின் நிறத்தில் இருந்தன. இப்படியாக எமது வங்கி தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும்” என்று தெரிவித்தார்.
டத்தோ மாட் நூர் நாவியுடன், எக்சிம் வங்கியின் வர்த்தகப் பிரிவின் துணைத் தலைவர் சைரில் முகமது தமிழ், தொலைத்தொடர்பு மற்றும் பங்குதாரர் மேலாண்மைப் பிரிவின் உதவித்தலைவர் முகமது நசிர் ஜோஹார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், யானைகள் காப்பகத்தின் தலைவர் நஷாருடின் ஒத்மான் ஆகியோரோடு, ஊடகவியலாளர்களும் கோல கண்டா தேசிய யானைகள் காப்பகத்தைப் பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி, படங்கள்: ஃபீனிக்ஸ்தாசன்