Home நாடு “சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்!” – டாக்டர் சுப்ரா

“சட்டத் திருத்த விதியை போராடி உருவாக்கியதே நாங்கள்தான்!” – டாக்டர் சுப்ரா

1533
0
SHARE
Ad
subra-launching-new-ambulanceகோலாலம்பூர் – “நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் திருமண மணவிலக்கு, சட்ட திருத்தங்களில் 88A என்ற சட்டவிதி தவிர்க்கப்பட்டிருப்பது குறித்து பொதுமக்களிடையே எழுந்துள்ள உணர்வுகளையும், கருத்துகளையும் நான் பெரிதும் மதிக்கிறேன். இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது முதல் நீண்ட காலமாக இதற்காகப் போராடி வந்துள்ளதும் மஇகாதான்! இந்த சட்டதிருத்த மசோதாவின் ஆணிவேராகவும், அஸ்திவாரமாகவும் இருந்ததும் மஇகாதான்” என மஇகா தேசியத் தலைவர்
டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் (படம்) இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் அவர் தொடர்ந்து கூறியிருப்பதாவது:-

“இந்த சட்டத்திருத்த மசோதாவை உருவாக்கி நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்தமாக கொண்டுவர போராடிய மஇகா இப்போதும் – எப்போதும் அந்தத் திருத்தத்தின் உள்ளடக்கங்களில் இருந்து, பின்வாங்காது, என்பதையும், எங்களின் கடமையிலிருந்து நாங்கள் சற்றும் விலக மாட்டோம் என்பதையும், இனி தவிர்க்கப்பட்ட 88-ஏ சட்டத் திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட இறுதி வரை தனது போராட்டத்தை மஇகா தொடரும் என்பதையும் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.நான் இந்த விவகாரத்தை அரசியல் ரீதியாகவோ, அரசியல் கட்சித் தலைவராகவோ பார்க்கவில்லை. மாறாக, இந்த சமுதாயத்தை வழிநடத்தும் தலைவனுக்குரிய தார்மீகப் பொறுப்போடும், கடமையோடும் பார்க்கிறேன். உங்களிடம் உள்ள உணர்வும் உணர்ச்சியும்தான் என்னிடமும் நிறைந்திருக்கிறது.

ஆனால், நடப்பு உண்மை நிலை என்ன என்பதை புரிந்து கொண்டு அதற்கேற்ப இயங்க வேண்டிய பொறுப்பும் நமக்கு இருக்கிறது. இந்த சட்டதிருத்தங்களை குறுகிய கண்ணோட்டத்திலும், ஒரே கோணத்திலும் பார்க்காமல், விசாலமான பார்வையோடும் அனைத்து அம்சங்களையும் ஒன்றிணைத்தும் மக்கள் பார்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த திருமண, மணவிலக்கு சட்டத் திருத்த மசோதாவை உருவாக்கி, நாடாளுமன்றம் வரை கொண்டுவர, மஇகா போராடி வந்திருக்கும் பயணத்தில் நாங்கள் என்ன செய்தோம், பின்னணியில் எப்படியெல்லாம் போராடினோம் என்பதில் எல்லாவற்றையும் நாங்கள் பகிரங்கமாக வெளியிட முடியாது. சிலவற்றைத்தான் கூற முடியும். சிலவற்றை வெளியிட இயலாது.

#TamilSchoolmychoice

அதே சமயம் இந்த விவகாரத்தில் நாம் பழைய நிலைமையிலிருந்து வெகுவாக முன்னேறி அடுத்த கட்டத்திற்கு வந்திருக்கிறோம் என்பதையும், முன்பு இல்லாத சில சட்டப் பாதுகாப்புகளை, நீதிமன்றங்களின் மூலம் பாதிக்கப்படும் மக்களுக்கு நாம் ஏற்படுத்தித் தந்திருக்கிறோம் என்பதையும் யாரும் மறுக்க முடியாது.

புதிய சட்டத் திருத்தங்களைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் நீதிமன்றங்கள் தங்களின் அதிகாரங்களைப் பயன்படுத்தி தீர்ப்புகள் வழங்கக் கூடிய சூழலையும் இதனால் நாம் உருவாக்கியிருக்கிறோம்.”

புதிய சட்டப் பாதுகாப்புகள் என்ன?

“தற்போது முன்மொழியப்பட்டிருக்கும் சட்டத் திருத்தங்கள் நடப்பு சட்டத்தின் 6 வெவ்வேறு பிரிவுகளில் ஒட்டு மொத்தமாக மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதோடு, முன்பு நமக்கு இல்லாத சில சட்டப் பாதுகாப்பு வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகின்றன எனவும் நான் வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

இவையெல்லாம் முன்பு நமக்கு இல்லாத சட்டப் பாதுகாப்புகள் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.

அந்தச் சட்டப் பாதுகாப்புகளில் சில:

• உதாரணமாக, திருமணமான தம்பதியரில் ஒருவர் இஸ்லாம் மதத்துக்கு மாறும்போது அந்தத் திருமணத்தை ஒரு பொது (சிவில்) நீதிமன்றத்தில் செல்லாததாக இனி அறிவிக்க முடியும். தற்போதுள்ள சட்ட நடைமுறைகள் இதற்கு அனுமதியளிக்கவில்லை.

• கணவருக்கோ அல்லது மனைவிக்கோ தேவையான உதவிகளை வழங்குவதற்கும், இத்தகைய திருமணத்தின் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு யார் ஆதரவளிப்பது, யார் பாதுகாப்பில் அவர்களை வளர்ப்பது போன்ற விவகாரங்களிலும் நீதிமன்றங்கள் இனி சுதந்திரமாக புதிய திருத்தங்களின் அடிப்படையில் தீர்ப்புகள் வழங்க முடியும்.

• இவை மட்டுமின்றி மதம் மாறிய தம்பதியரில் ஒருவர், அவர் சம்பந்தப்பட்ட திருமணம் நீதிமன்றத்தால் செல்லாதது என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்னரே மரணமடைந்தால் அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் குறித்தும் இந்தச் சட்டத் திருத்தங்கள் முறையான தீர்வுகள் வழங்குகின்றன.

• தம்பதியரில் ஒருவர் மதம் மாறும்போது அவர்களுக்கிடையே ஏற்படும் சொத்துப் பிரிவினைகளும் ஒரு முக்கிய சர்ச்சையாக எப்போதும் திகழ்ந்து வந்திருக்கின்றன. இதற்கும் புதிய சட்டத் திருத்தங்கள் முன்பு இல்லாத அளவுக்கு முறையான தீர்வுகளை வழங்குகின்றன.

• திருமண பந்த காலத்தின்போது தம்பதியரால் இணைந்து சேர்க்கப்பட்ட சொத்துகள் எவ்வாறு பிரிக்கப்பட வேண்டும் என்பது குறித்தும் தெளிவான நடைமுறைகளை இந்தப் புதிய சட்டத் திருத்தங்கள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

• அத்துடன் பாதிக்கப்படும் சம்பந்தப்பட்ட குழந்தை உயர் கல்வியை முடிக்கும்வரை அந்தக் குழந்தைக்கான பராமரிப்பு செலவினங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது குறித்த தெளிவான விளக்கங்களையும் இந்தப் புதிய சட்டத் திருத்தங்கள் தெளிவாக வரையறுக்கின்றன.
மேற்குறிப்பிட்ட புதிய சட்டப் பாதுகாப்புகள் இதற்கு முன் இருந்ததில்லை என்பதையும் மஇகாவின் முயற்சியால்தான், போராட்டத்தினால்தான் இந்தப் புதிய சட்டப் பாதுகாப்புகள் நமக்குக் கிடைத்திருக்கின்றன என்பதையும் பொதுமக்கள் உணர வேண்டும்.

எனவே, இந்த விவகாரத்தில் முன்பு இருந்த நிலைமையை விட தீர்வுகள் காண்பதில் நாம் வெகுவாக முன்னேறியிருக்கிறோம் – முன்னெடுத்துச் சென்றிருக்கிறோம் என்பதில் சற்றும் ஐயமில்லை.

இந்தப் புதிய சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தின் தாக்கத்தை, கடுமையை வெகுவாகக் குறைத்திருக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே, ஒரு சிலர் கூறுவதுபோல், 88-ஏ ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்பதற்காக மேற்கூறிய பலன்களையும், நன்மைகளையும், புதிய சட்டப் பாதுகாப்புகளையும் நாம் இழக்கும் வண்ணம் ஒட்டு மொத்த சட்டதிருத்தங்களும் வேண்டாம் என்று நாம் கூறுவது நியாயமா?

நமக்குக் கிடைக்கின்ற பலன்களையும், சட்டப் பாதுகாப்புகளையும் முதலில் ஏற்றுக் கொண்டு விட்டு அடுத்த கட்டப்போராட்டத்தைத் தொடர்வதுதான் சமயோசித நடவடிக்கையாக இருக்கும். அனைவரும் இதனை நன்கு யோசித்துப் பார்க்க வேண்டும்!

இனி அடுத்த கட்டப் போராட்டம் தொடரும்
எனவே, இனி அடுத்த கட்டமாக, ஒருதலைப்பட்ச மதமாற்ற சிக்கல்களுக்கான தீர்வுகளை திருத்தங்களாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற நமக்கு முன்னே இருக்கும் சட்ட சிக்கல்களையும், இடர்களையும் தீர்ப்பதற்கான போராட்டத்தை நாம் தொடக்குவோம்.

இந்தப் போராட்டத்திலிருந்தோ, நமது பொறுப்புகளிலிருந்தோ நாம் சற்றும் பின்வாங்கப் போவதுமில்லை. தொய்வடையப் போவதுமில்லை. 88-ஏ சேர்க்கப்படவில்லை என்பது முடிவான முடிவல்ல. இன்னொரு போராட்டத்தின் தொடக்கமே!
அனைவரும் ஒன்றுகூடி ஒற்றுமையுடன் இந்தப் பிரச்சனையை ஒருமித்த குரலில் அணுகினால் இதற்கான தீர்வும் நமக்குக் கூடிய விரைவில் கிடைக்கக்கூடும்.

எனினும் இதில் எந்தவித அரசியல் சமரசங்களுக்கும் இடம் கொடுக்காமல், யாருக்கும் அடிபணியாமல் மஇகா தொடர்ந்து போராடும்.

முஸ்லீம் அல்லாதார் அதிலும் குறிப்பாக இந்தியர்கள் இந்த விவகாரத்தில் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண மஇகா எந்தக் காலத்திலும் முன் நிற்கும் – குரல் கொடுக்கும் – என்ற உறுதி மொழியை இந்த வேளையில் நான் வழங்க விரும்புகிறேன்.”