சிங்கப்பூர்: இங்குள்ள உல்லாசத் தீவான செந்தோசாவின் புகழ்பெற்ற அடையாளமாகத் திகழ்வது டைகர் ஸ்கை கோபுரமாகும். சிங்கப்பூரில் கடல் மட்டத்திலிருந்து 131 மீட்டர் உயரத்திற்கு எழுந்து நிற்கும் இந்தக் கோபுரம்தான் அந்நாட்டின் மிக உயரமான பார்வையிடும் கோபுரமாகும்.
இன்று சனிக்கிழமை மாலை 7.10 மணியளவில் இந்தக் கோபுரத்தின் உச்சிக்குக் கயிற்று வாகனம் (கேபிள் கார்) மூலம் சென்ற பயணிகள் குழு ஒன்று அங்கிருந்து கீழே இறங்க முடியாமல் சிக்கிக் கொண்டது.
38 பயணிகள் கொண்ட இந்தக் குழுவில் 4 குழந்தைகளும் இருந்தனர்.
சிங்கையின் பொதுத் தற்காப்புப் படை அவர்களை மீட்கப் போராடியது. தீயணைப்புப் படைவீரர்கள், மீட்புப் படையினர் என பலரும் அங்கு குழுமினர். சுமார் இரண்டு மணிநேரப் போராட்டத்திற்குப் பின்னர் இரவு 9.45 மணியளவில் சிக்கிக் கொண்ட அவர்கள் அனைவரும் பத்திரமாகத் தரையிறக்கப்பட்டனர். இந்தத் தகவலை சிங்கையின் பொது தற்காப்பு படை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்திருக்கிறது.
இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் காயமடையவில்லை என்றும் அறிவிக்கப்பட்டது.