சிங்கப்பூர் – ‘ஜோன் எஸ்.மேக்கெய்ன்’ என்ற பெயர் கொண்ட அமெரிக்கப் போர்க்கப்பல் சிங்கப்பூருக்கு கிழக்கே மலாக்கா நீரிணையில் வாணிபக் கப்பல் ஒன்றுடன் நடுக்கடலில் இன்று திங்கட்கிழமை அதிகாலை மோதிக் கொண்டது.
யுஎஸ்எஸ் மெக்கெய்ன் போர்க்கப்பல் – கோப்புப் படம்
இதைத் தொடர்ந்து, உதவிக்கும், யாரும் பாதிப்படைந்திருந்தால் மீட்புப் பணிகளில் ஈடுபடவும், சிங்கையிலிருந்து மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர்.
அமெரிக்க கடற்படை இந்த அறிவிப்பை வெளியிட்டது.
‘அல்னிக் எம்சி’ என்ற பெயர் கொண்ட வாணிபக் கப்பலுடனான இந்த மோதல் மலேசிய நேரம் இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.24க்கு நிகழ்ந்தது.
இந்த மோதலில் அமெரிக்கப் போர்க்கப்பலுக்கு சேதங்கள் ஏற்பட்டதாகவும், கடற்படை வீரர்கள் யாரும் பாதிப்படைந்துள்ளனரா என்பது ஆராயப்பட்டு வருகிறது என்றும் அமெரிக்க கடற்படை தனது அறிக்கையில் மேலும் தெரிவித்தது.
மீட்புப் படகுகள், சிங்கையின் கடற்படைக் கப்பல் ஒன்று, ஹெலிகாப்டர்கள், சிங்கைக் கடலோரக் காவல்துறை படகுகள், ஆகியவை மோதல் நடந்த கடல் பகுதிக்கு உதவிக்கு அனுப்பப்பட்டிருக்கின்றன.