சிரம்பான் – ஒரு சில தரப்புகள் ஊடகங்களில் தெரிவித்து வருவதைப் போல் நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள, சங்காய் தமிழ்ப் பள்ளியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த திருவள்ளுவர் சிலை மூடப்படவில்லை என்பதை, நேற்று அந்தப் பள்ளிக்கு நேரில் வருகை தந்த மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் உறுதிப்படுத்தினார்.
அவரது வருகையின்போது கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதனும் உடனிருந்தார்.
சங்காய் தமிழ்ப் பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா கண்டது
இதற்கிடையில் சங்காய் தமிழ்ப் பள்ளியின் புதிய கட்டடத் தொகுதி திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் ஹசான், திருவள்ளுவரின் பெருமைகள் குறித்துத் தனக்கும் தெரியும் என்றும், தனது வருகைக்காக வள்ளுவர் சிலை மூடப்பட்டது என்ற கூற்றில் உண்மையில்லை என்றும் கூறினார்.
சங்காய் தமிழ்ப் பள்ளியின் வரலாறு குறித்தும் விளக்கிய மந்திரி பெசார், தோட்டம் கைமாறியதைத் தொடர்ந்து, தமிழ்ப் பள்ளிக்கு மாற்று நிலம் ஒதுக்கப்படத் தான் முயற்சிகள் மேற்கொண்டதாகவும், தானும் தோட்டப்புறப் பின்னணியில் இருந்து வந்தவன்தான் என்றும், எனவே இந்தியர்களின் பண்பாடு, பழக்கவழக்கங்கள் குறித்துத் தனக்கும் நன்கு தெரியும் என்றும் குறிப்பிட்டார்.
மேலும், திருவள்ளுவர் குறித்தும் தனக்கு நன்கு தெரியும் என்றும் அவரது சிலையை மூடச் சொல்லியோ, அகற்றச் சொல்லியோ தான் ஒருபோதும் கூறியதில்லை என்றும் முகமட் ஹசான் தனது உரையில் தெரிவித்தார்.
இதுவரையில் 11 தமிழ்ப் பள்ளிகளுக்கு நெகிரி மாநிலத்தில் நிலம் பெற்றுத் தந்துள்ளதாகவும் முகமட் ஹசான் தனதுரையில் சுட்டிக் காட்டினார்.
படங்கள்: நன்றி – drsubra.com