Home வணிகம்/தொழில் நுட்பம் கனடா உலகத் தமிழ் இணைய மாநாடு இனிதே நிறைவு கண்டது

கனடா உலகத் தமிழ் இணைய மாநாடு இனிதே நிறைவு கண்டது

2761
0
SHARE
Ad

தொரண்டோ – இங்கு நடைபெற்று வந்த உத்தமம் என்ற உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் ஏற்பாட்டிலான 16வது உலகத் தமிழ் இணைய மாநாடு, தமிழ் மொழியை தொழில் நுட்பப் பாதையில் அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வண்ணம், பல சிறப்பான ஆய்வுப் படைப்புகள், உரைகளுடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆகஸ்டு 27-ஆம் நாள் இனிதே நிறைவு கண்டது.

image1 (1)‘குறள் பாட்’ செயலியை உருவாக்கிய செந்தில் (இடம்), சிவா (வலம்) ஆகிய இருவருடன் முத்து நெடுமாறன்.

ஞாயிற்றுக்கிழமை 27ஆம் நாள் நடைபெற்ற மூன்றாம் நாள் நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் இருந்து காணொளி (வீடியோ) வழி படைக்கப்பட்ட இரு கட்டுரைகளுக்குப் பின், மூன்றாம் நாளுக்கான முகாமை உரை இடம்பெற்றது.

#TamilSchoolmychoice

மதுரைத் திட்டம் குறித்து கல்யாணசுந்தரம் உரை

image1மதுரைத் திட்டம் குறித்து உரையாற்றிய சுவிட்சர்லாந்தின் கு.கல்யாணசுந்தரம்

மதுரைத் திட்டத்தின் தோற்றுநரும், உத்தமத்தின் அமைப்பாளர்களின் ஒருவருமான சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த முனைவர் கு. கல்யாணசுந்தரம் இந்த முகாமை உரையை ஆற்றினார்.  மதுரைத் திட்டத்தின் தொடக்ககால வரலாற்றையும் அத்திட்டத்தின் அடுத்தக் கட்ட மேம்பாடுகளையும் குறித்து கல்யாணசுந்தரம் பேசினார்.

இளங்கோ சேரன் – முத்து அண்ணாமலை கட்டுரைகள்

image2தமது ‘எழில்’ கணினி மொழி பற்றிய நூலுடன் முத்து அண்ணாமலை

தொழில்நுட்பப் படைப்புகளில் இளங்கோ சேரன் படைத்த தரவமைப்பு (data structures) தொடர்பான கட்டுரையும், முத்து அண்ணாமலை படைத்த ‘எழில்’ என்னும் கணினி மொழி தொடர்பான கட்டுரையும் பலரையும் கவர்ந்தன. தமிழிலேயே கணினிக் கட்டளைகளை எழுத உதவும் ‘எழில்’, தமிழ்வழிக் கற்கும் மாணவர்களின் கணிமைச் சிந்தனை வளர்ச்சிக்கு பேருதவியாக அமையும் எனும் கருத்து பரவலாக மாநாட்டில் நிலவியது. இந்தக் கணினி மொழியைக் கற்பதற்கு உதவும் நூல் ஒன்றையும் முத்து அண்ணாமலை அறிமுகப்படுத்தினார்.

image1 (1)2தரவமைப்புகள் பற்றிப் பேசிய இளங்கோ சேரன்

உணவு வேளைக்குப் பிறகு நடந்த ‘குறள் பாட்’ என்னும் செயற்கை அறிவு கொண்ட செயலியின் செயல்முறைக் காட்சி, வளர்ந்து வரும் புதிய நுட்பங்களின் ஆற்றலை எளிமையாக விளக்கியது. இதனைப் படைத்த கணினி வல்லுநர் செந்தில்,  ஒரு முகநூல் உரையாடலை எவ்வாறு இந்த ‘குறள் பாட்’  நகைச்சுவை நயத்தோடு நடத்துகிறது என்பதைக் காட்டினார்.

மேலும் சில தொழிநுட்பக் கட்டுரைகளுக்குப் பின் முனைவர் பொன்னவைக்கோ அவர்களின் நிறைவுரையோடு மாநாடு நிறைவுக்கு வந்தது.

அடுத்த மாநாடு

image2 (1)அடுத்த உலகத் தமிழ் இணைய மாநாட்டினை நடத்தும் உரிமம் வழங்கப்படுகிறது

17-வது தமிழ் இணைய மாநாட்டினை எடுத்து நடத்த கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகம் முன்வந்தது. அதன் துணைவேந்தர் பேராசிரியர் ராமசாமி அவர்களின் சார்பில், முனைவர் பொன்னவைக்கோ மாநாடு நடத்தும் உரிமத்தை உத்தமம் அமைப்பின் நிருவாகக்குழு உறுப்பினர் முனைவர் கல்யாணசுந்தரம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்.