Home நாடு நஜிப் – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நடக்குமா?

நஜிப் – டொனால்ட் டிரம்ப் சந்திப்பு நடக்குமா?

734
0
SHARE
Ad

trump-najibவாஷிங்டன் – எதிர்வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி நடைபெறத் திட்டமிடப்பட்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பு நடைபெறுமா என்ற கேள்விகள் அமெரிக்க வட்டாரங்களில் எழுப்பப்பட்டிருக்கின்றன.

நஜிப்புக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை 1-எம்டிபி விவகாரத்தில் வழக்கு தொடுத்து 1-எம்டிபி சொத்துக்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்தத் தருணத்தில் நஜிப்-டிரம்ப் சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

1-எம்டிபி விவகாரத்தில் தொடர்ந்து பல்வேறு ஊழல்களை அம்பலப்படுத்தி வரும் அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை, இருவருக்கும் இடையிலான சந்திப்பு குறித்து தலையங்கம் வெளியிட்டு அதில் நஜிப்பைச் சந்திப்பதால் டிரம்ப் நிர்வாகத்திற்கு ஏற்படக்கூடிய பாதகங்களைப் பட்டியலிட்டு, டிரம்பை எச்சரித்துள்ளது.

#TamilSchoolmychoice

இந்த சந்திப்பால் நஜிப்பின் பிரபலம் கூடுமே தவிர, டிரம்புக்கு சாதகம் ஏதும் இல்லை என்றும் வால் ஸ்ட்ரீட் குறிப்பிட்டிருக்கிறது. டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் உள்ள நீதித்துறை அலுவலகம் விசாரித்து வரும் வழக்கில் சம்பந்தப்பட்ட ஒரு தலைவரைச் சந்திப்பதால் டிரம்புக்கு எந்தவித இலாபமும் இல்லை எனவும் அந்தப் பத்திரிக்கை மேலும் தெரிவித்திருக்கிறது.

வட கொரியா விவகாரத்தில், நஜிப்பின் ஆதரவைப் பெறவும், சீனாவிடம் இருந்து விலகி இருக்க வற்புறுத்தியும் டிரம்ப் நஜிப்பைச் சந்திக்கிறார் என்ற ஆரூடங்கள் அமெரிக்க வட்டாரங்களில் எழுப்பப்படுகின்றன.

ஆனால், நஜிப் சீனாவின் ஆதரவைப் பெற்றுத்தான் இயங்குவாரே தவிர அவர்களிடம் இருந்து விலகி இருக்கமாட்டார் என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மலேசியா சுதந்திரமான ஜனநாயக நாடாக இருப்பதை டிரம்ப் உறுதி செய்ய வேண்டுமே தவிர, இந்த முக்கியமான காலகட்டத்தில் நஜிப்புக்கு உதவியாகச் செயல்படக் கூடாது என்றும் வால் ஸ்ட்ரீட் கருத்து தெரிவித்திருக்கிறது.

மலேசியா சர்வாதிகாரத்தனமான பாதைக்கு செல்லுமானால், அதன்மூலம் சீனா தொடர்ந்து தனது ஆதரவைத் தந்து மலேசியாவின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் எனவும் கூறியுள்ள வால் ஸ்ட்ரீட், தற்போது அமெரிக்காவைத் தாக்கியுள்ள ஹார்வி புயல் சம்பவத்தைக் காரணம் காட்டி நஜிப்புடனான சந்திப்பை டிரம்ப் இரத்து செய்யலாம் என்றும் ஆலோசனை தெரிவித்திருக்கிறது.

கறைபடிந்த ஒரு தலைவரைச் சந்தித்து அவர் வெள்ளை மாளிகையில் டிரம்ப்புடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுக் கொள்ளும் வாய்ப்பை அவருக்கு வழங்கக் கூடாது என்றும் வால் ஸ்ட்ரீட் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நஜிப்-டிரம்ப் இடையிலான சந்திப்பு நடக்குமா அல்லது இரத்து செய்யப்படுமா என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

-செல்லியல் தொகுப்பு