சிரம்பான் – பிரதமர் துறையின் கீழ், பேராசிரியர் டத்தோ என் எஸ் இராஜேந்திரனின் தலைமையில் இயங்கும் செடிக் (SEDIC) அமைப்பின் நிதி உதவியுடன், செப்டம்பர் திங்கள் 8-ஆம் நாள், சிரம்பானில், லாடாங் புக்கிட் பெர்த்தாம் ஆரம்பத் தமிழ் பள்ளியில், வாசிப்பு-எழுத்து குறைபாடு (Dyslexia) உள்ள பிள்ளைகளுக்கான, மிக உகந்த கற்றல் முறையை கற்பிக்க, மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை இராமையா, அவ்வமைப்பின் பொருளாளர் திரு செந்தில்நாதன் உதவியோடு, ஆசிரியர்களுக்கான ஒரு பயிற்சிப் பட்டறையை அண்மையில் நடத்தினார்.
இந்தப் பட்டறைகளுக்கான ஏற்பாடுகளை, தமிழ் மொழி உதவி இயக்குனர் திரு சத்தியநாராயணன் தலைமையில், நெகிரி தமிழ் மொழி முகாமை கண்காணிப்பாளர் திருமதி அன்பரசி அவர்களும், தமிழ்ப் பள்ளி கண்காணிப்பாளர் ஷங்கர் அவர்களும், ஜெம்புல் பிபிடி அதிகாரி முரளிதரன் அவர்களும் மிக நேர்த்தியாக செய்திருந்தார்கள்.
பட்டறையை ஆரம்பிக்கும் முன், நெகிரி மாநிலத்தில் 77, தலைமை ஆசிரியர்களுக்கு, டிஸ்லெக்சியா பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பள்ளிகளில் ஏற்கனவே நடத்திய பட்டறையில் பெற்றிருக்கும் உபகரணப் பேழையை பயன்படுத்தும் முக்கியத்துவம் பற்றி உணர்த்தவும், ஒரு மணி நேரம், கேள்வி பதில்களுடன் முனைவர் முல்லை பேசினார். இந்தப் பேழையையின் வழி பயன் மிக கண்ட சில பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், அவர்களின் கருத்துகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
இந்தப் பட்டறை, முக்கியமாக, சிறப்பு மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கும், பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கும் பிரத்தியேகமாக நடத்தப்பட்டது. முன்பு நெகிரியில் நடத்திய பட்டறையின் எதிர் ஒலியாகவே மீண்டும் நெகிரிக்கு அழைக்கப்பட்டது, மலேசிய தேசிய டிஸ்லெக்சியா இயக்கம். நம் குழந்தைகள் டிஸ்லெக்சியாவிலிருந்து மீள நெகிரி மாநிலத்தில் 3 பட்டறைகளை சிறப்பாக நடத்த முனைப்போடு இயங்கிய திரு சத்தியநாராயணன் அவர்களுக்கும், மாண்புமிகு பிரதமருக்கும், பேராசிரியர் டத்தோ டாக்டர் என் எஸ் இராஜேந்திரனுக்கும், செடிக் அமைப்புக்கும் இவ்வேளையில் அமைப்பின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக டிஸ்லெக்சியா இயக்கத்தின் தலைவர் முனைவர் முல்லை இராமையா (படம்) தெரிவித்தார்.
நெகிரி மாநிலத்தின் பல ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, வரும் டிசம்பர் திங்கள், கோலாலம்பூரில், டிஸ்லெக்சியா குழந்தைகளுக்கு, ஆங்கிலம் கற்பிக்கும் பயிலரங்கம் நடத்தப்படும் என்றும் அதற்கான நாளும் தேதியும் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் முல்லை இராமையா மேலும் தெரிவித்தார்.