மூவார் – தான் ஒரு நல்ல முஸ்லிமாக நடந்து கொள்ளவே, தனது லாண்டரி கடையை (சலவை நிலையம்) ‘முஸ்லிம்களுக்கு மட்டும்’ என்று வைத்ததாக உரிமையாளர் தெரிவித்திருக்கிறார்.
“முஸ்லிம்களுக்கு சுத்தம் என்பது துணிகளுக்கு மட்டுமல்ல எல்லாமும் தான். எனவே முஸ்லிம்களுக்கென்று ஒரு தனி இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தேன்.”
“இந்த விவகாரம் இவ்வளவு சர்ச்சையை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. நீங்கள் முஸ்லிம்களின் நிலையில் இருந்து யோசித்துப் பாருங்கள்.”
“நான் இனரீதியாகப் பிரிக்கவில்லை. காரணம் சீனர்களிலும், இந்தியர்களிலும் முஸ்லிம்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். அதுமட்டுமின்றி எனது கடையின் அருகே நிறைய துணி துவைக்கும் கடைகள் இருக்கின்றன. எனது கடையிலிருந்து 300 மீட்டர் தொலைவிலேயே மற்றொரு கடை இருக்கிறது.” என்று அக்கடையின் உரிமையாளர் தன்னைத் தற்காத்துக் கருத்துத் தெரிவித்திருக்கிறார்.
இதனிடையே, இந்த விவகாரம் நட்பு ஊடகங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு, இஸ்லாம் அல்லாதவர்களிடையே கடும் ஆட்சேபத்தை ஏற்படுத்தி வருகின்றது.