Home நாடு “இந்தியர் வாக்குகளை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் உளறுகிறார்கள்” – தேவமணி சாடல்

“இந்தியர் வாக்குகளை இழந்து விடுவோம் என்ற அச்சத்தில் உளறுகிறார்கள்” – தேவமணி சாடல்

1322
0
SHARE
Ad

devamany-2கோலாலம்பூர் – மஇகாவும், தேசிய முன்னணியும் இணைந்து இந்தியர்களின் பிரச்சனைகளுக்குத் தொடர்ந்து தீர்வு கண்டு வருவது தொடர்பில், எங்கே இந்தியர் வாக்குகளை இழந்து விடுவோமோ என்ற அச்சத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் உளறிக் கொண்டிருக்கிறார்கள் என மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி சாடியுள்ளார்.

“இந்திய சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை களைய ஆக்ககரமான திட்டங்களை தீட்டி நிறைவேற்றும் பிரதமர் நஜிப்பிற்கு ஆதரவளிப்பதா?அல்லது இப்பிரச்சினைகளுக்கு வித்திட்ட முன்னாள் பிரதமருடன் இணைந்து மார்த்தட்டுவத?  எது கேலிக்கூத்தானது எதிர்க்கட்சியினரே?” என்றும் கேள்வி எழுப்பியிருக்கும் தேவமணி, “அரசியல் நோக்கத்திற்காக பாதாள நிலைக்கு இறங்கும் எதிர்க்கட்சியினர், தேசிய முன்னணி அரசின் இந்திய சமுதாயத்திற்கான சிறப்புத் திட்டங்களை கீழறுப்பு செய்ய மக்களை குழப்புவதில் ஆச்சரியம் ஏதும் இல்லை. தங்கள் நாடகங்கள் அனைத்தையும் மக்கள் எளிதில் நம்பி விடுவர் என எதிர்க்கட்சியினர் போலி நம்பிக்கை கொண்டுள்ளனர்” என்றும் கூறியிருக்கிறார்.

mic-71-general-assembly-24092017 (2)மஇகாவின் 71-வது மாநாட்டில் “பிரதமர் நஜிப் தலைமையிலான தேசிய முன்னணி அரசு இந்திய சமுதாய மேம்பாட்டிற்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. ம.இ.காவின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்திய மாணவர்கள் முறையான சூழ்நிலையில் கல்வி கற்கும் நோக்கில் தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக ரிங்கிட் 90 கோடியினை பிரதமர் நஜிப் அங்கீகரித்துள்ளார். தனியார் பாலர் பள்ளி என்பது ஆடம்பர வசதி என மாறிவிட்ட நிலையில், தமிழ்ப்பள்ளிகளிலேயே பாலர் வகுப்புகளை அறிமுகப்படுத்தி குழந்தைகளை ஆரம்பக்கல்விக்கு தயார்ப்படுத்தும் உன்னத முயற்சியும் நாடு முழுமையும் நடைப்பெற்று வருகின்றது” என்றும் தேவமணி தெளிவுபடுத்தினார்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் முறையான அடையாள ஆவணங்கள் பெற்றிருக்காத மக்களுக்கு உதவும் நோக்கில், அதன் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க அரசு இலாகாக்களை ஒருங்கிணைத்து தேசிய ரீதியில் மைடஃப்தார் இயக்கம் முடுக்கிவிடப்பட்டுள்ளது என்ற தேவமணி, பொதுப் பல்கலைக்கழகங்களில் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில், நாட்டின் மனித வளத்தினை மேம்படுத்தும் வண்ணம் அதிகமான இந்திய இளைஞர்களுக்கு தொழிற்திறன் பயிற்சி வாய்ப்புகளும் வழங்கப்பட்டு வருவது வெள்ளிடை மலையாகும் என்றும் தெரிவித்தார்.

mutharasan-bk launch-devamany“இவ்வனைத்து திட்டங்களுக்கும் சிகரமாக, பிரதமர் அறிமுகப்படுத்திய மலேசிய இந்தியர் பெருவியூக திட்டமானது அனைத்து முயற்சிகளையும் ஒருமுகப்படுத்தி, அதன் நோக்கங்கள் அடைவு நிலை அடைவதை உறுதி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. செடிக் எனப்படும் இந்தியர் சிறப்பு அமலாக்க செயற்குழுவினால் இப்பெருவியூக திட்டம் இந்தியர்களின் வளர்ச்சி திட்டங்கள் வெறும் கொள்கை அளவில் நில்லாமல், அடுத்த பத்து ஆண்டுகளில் முழுமையாக அமலாக்கப்படுவதை வலியுறுத்துகின்றது” என்றும் கூறியிருக்கும் பிரதமர் துறையின் துணையமைச்சரான தேவமணி, சிலாங்கூர், பினாங்கு போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் இந்தியர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருப்பதையும் சுட்டிக் காட்டினார்.

“சிலாங்கூர் மற்றும் பினாங்கு இரண்டும் எதிர்க்கட்சி ஆட்சி புரியும் மாநிலங்களாக இருப்பினும், எவ்வித பேதமுமின்றி பிரதமரின் இந்தியர் நலத்திட்டங்கள் அங்கும் செயல்படுத்தப்படுகின்றன. நேர்மையான நோக்குடன், தேசிய முன்னணி ஆட்சி புரியும் மாநிலங்கள் மட்டுமின்றி இந்திய சமுதாயத்திற்கு முழுமையாக பயனளிக்கும் வகையில் இத்திட்டங்கள் அமைந்துள்ளன. எதிர்க்கட்சியினர் இந்தியர்களின் நலன் மீது உண்மையிலே அக்கறை கொண்டு செயலாற்றியிருந்திருந்தால், அவர்களின் சாதனைகளை பட்டியலிடலாமே? அதைவிட்டு மத்திய அரசின் திட்டங்களை குறை கூறி மலிவு விளம்பரம் தேடுவதிலேயே முனைப்பாக உள்ளனர். அரசின் திட்டங்கள் செயல் வடிவம் பெறும் முன்னரே, அவற்றை மட்டம் தட்டுவதே எதிர்க்கட்சியினரின் மேதாவித்தனமாக உள்ளது. திட்டங்கள் நிறைவேறியதும், அவை தங்கள் விமர்சனங்களின் பலனால் நிகழ்ந்தன என பல்டி அடிப்பர். எது எப்படி இருப்பினும், மக்கள் தற்போது விழித்துக் கொண்டு விட்டனர்; யாருடைய முயற்சியின் காரணமாக,  திட்டங்கள் நிறைவேற்றம் காண்கிறது என மக்கள் அறிவர” என்றும் தேவமணி விளக்கினார்.

Ramasamy-penang-deputy-cm“கடந்த பத்தாண்டுகளாக, பக்காத்தான் கூட்டணியின் வாக்குறுதிகள் மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன. மக்களை அரசியல் ரீதியாக பிளவுப்படுத்துவதே அவர்களின் இலக்காகும். தாங்கள் ஆளும் மாநிலங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கத் திராணியற்று, மத்திய அரசினை விமர்சிப்பதில் காலம் நகர்த்துகின்றனர். உண்மைகளை திரித்து பொய்யான அரசியலை கையாள்வதே சிதறுண்டு கிடக்கும் எதிர்க்கட்சி கூட்டணியின் வியூகமாக உள்ளது” என்றும் எதிர்க்கட்சிக் கூட்டணியைச் சாடியிருக்கும் தேவமணி, பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமியின் (படம்) போக்குக்கும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

“பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமியின் அறிக்கையில் அதிருப்தி அடைந்திருந்தாலும், மலேசிய இந்தியர் பெருவியூக திட்டத்தின் சாராம்சங்களின் வழியாக இந்திய சமுதாயம் வேலை வாய்ப்பு, கல்வி, தொழில்முனைவர் துறை, சமூகவியல் என பல துறைகளில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அவர் மனப்பாடம் செய்து ஒப்பித்திருப்பது ஆறுதல் அளிக்கின்றது. மலேசிய பெருவியூக திட்டத்தின் தலையாய நோக்கமே இப்பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை காண்பது எனும் உண்மையினை மட்டும் இராமசாமி ஏன் உணர மறுக்கின்றார்?” என்றும் தேவமணி கேள்வி எழுப்பினார்.

“பொதுத்தேர்தல் நெருங்கிவரும் வேளையில், இதற்கு மேலும் புதிதாக சிந்தித்து உருப்படியாக இந்திய சமுதாயத்திற்கு ஏதும் செய்ய இயலாது என்பதை உணர்ந்தவுடன், அரசாங்கத்தின் திட்டங்களை விமர்சித்து அதே திட்டங்களை நகல் எடுத்து சிற்சில மாற்றங்களுடன் தங்களின் சுய சிந்தனையில் உதித்தது போல நாடகமாடி அரசியல் இலாபம் பார்க்க இராமசாமியும் எதிர்க்கட்சியினரும் முனைந்துள்ளனர். இக்கூட்டணிக்கு ‘கொள்கையின் சிகரம்’ துன் மகாதீர் தலைமை தாங்குவது ‘பழைய குருடி கதவை திறடி’ போல உள்ளது. மதமாற்று பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகள் நாட்டின் சட்டவிதிக்கேற்ப மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கையாக உள்ள வேளையில், பிரதமரும் ம.இ.காவும் அதற்கான முயற்சிகளில் இருந்து என்றும் பின் வாங்கியதில்லை. இந்த உண்மை நிலையை நன்கு அறிந்தும், மக்களை திசை திருப்பப் பார்க்கும் இராமசாமியின் செயலானது அவரின் இயலாமையையும் சமூக சிந்தனையின்மையையுமே காட்டுகின்றது” என்றும் தேவமணி தனது பத்திரிக்கை அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.