பெய்ஜிங் – உலகிலேயே அதிக சக்தி வாய்ந்த கடப்பிதழ்களின் பட்டியலில், மலேசியக் கடப்பிதழ் 4-வது இடத்தில் இருப்பதாக குளோபல் பாஸ்போர்ட் பவர் ரேங்க் 2017 -ன் ஆய்வு சொல்கிறது.
மலேசியக் கடப்பிதழை வைத்து சுமார் 150 நாடுகளுக்கு விசா இன்றிப் பயணம் செய்ய முடியும்.
இந்நிலையில், தற்போது வரை 1 லட்சத்து 92 ஆயிரத்து 402 மலேசியக் கடப்பிதழ்கள் காணாமல் போனதாகப் புகார்கள் பதிவாகியிருப்பதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி தெரிவித்திருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, சீனா வேர்ல்ட் ஹோட்டலில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சாஹிட், “உலகளவில் மொத்தம் 76 மில்லியன் கடப்பிதழ்கள் திருடப்பட்டிருக்கின்றன அல்லது மாயமாகியிருக்கின்றன. அவற்றில் மலேசியக் கடப்பிதழ்கள் ஏறக்குறைய 0.25 விழுக்காடு” என்று தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையில், மொத்தம் 52, 459 மலேசியக் கடப்பிதழ்கள் காணாமல் போனதாகப் புகார்கள் பதிவாகியிருப்பதாகவும் சாஹிட் தெரிவித்தார்.
என்றாலும், இண்டர்போலின் உதவியுடன், திருடப்பட்ட மலேசியக் கடப்பிதழ்களைத் தங்களால் முடக்க முடியும் என்றும் சாஹிட் குறிப்பிட்டார்.
இதனிடையே, கள்ளச் சந்தையில் மலேசியக் கடப்பிதழ்கள் சுமார் 1லட்சம் முதல் 2 லட்சத்து 50 ஆயிரம் வரையில் விற்பனை செய்யப்படுவதாக தேசியக் காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ முகமது ஃபுசி ஹாருன் தெரிவித்திருக்கிறார்.
எனவே மலேசியர்கள் தங்களின் கடப்பிதழ்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், காணாமல் போய்விட்டால் உடனடியாக குடிநுழைவு இலாகாவிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்திருக்கிறது.