காஜாங் சிறையில் அவர் தனது அடுத்த ஒரு மாத காலத்தைக் கழிக்கும்போது, அங்கே பகவத் கீதையையும், சமஸ்கிருத மொழியையும் படிக்கப் போவதாகவும், அதற்கேற்ற வகையில் அவருக்கு அந்தப் புத்தகங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு அவற்றை அவர் சிறைக்குள் உடன் கொண்டு செல்வதாகவும் அவரது வழக்கறிஞர் என்.சுரேந்திரன் கூறியிருக்கிறார்.
ஏப்ரல் 2012-ஆம் ஆண்டில் பெர்சே 3 பேரணியில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டு அவர் மீது காவல் துறையினர் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து அவருக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் 1000 ரிங்கிட் அபராதமும், 1 மாத சிறைத் தண்டனையும் விதித்தது.
அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த தியான் சுவா, நேற்று வெள்ளிக்கிழமை அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனது மேல்முறையீட்டை மீட்டுக் கொண்டு, அபராதத் தொகையைச் செலுத்தியதோடு, ஒரு மாத சிறைவாசத்தையும் அனுபவிக்கத் தயாரானார்.
பகவத் கீதை, சமஸ்கிருதம் தவிர்த்து, தனது சிறைவாச காலத்தின்போது லத்தீன் மொழியையும், பைபிள், குரான் போன்ற சமய நூல்களைப் படிப்பதற்கும் அவர் ஆர்வமாக இருக்கிறார் என்றும் அவரது வழக்கறிஞரும் பிகேஆர் கட்சியின் பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேந்திரன் தெரிவித்திருக்கிறார்.
பகவத் கீதையின் வழி இந்து மதம் குறித்து மேலும் அதிகமாகத் தெரிந்து கொள்ளவும் தியான் சுவா ஆவலாக இருக்கின்றார் என்றும் சுரேந்திரன் மேலும் கூறியிருக்கிறார்.