சென்னை – சிவாஜி பிறந்த நாளான இன்று அக்டோபர் 1-ஆம் தேதி, சென்னையில் சிவாஜி மணிமண்டபம் மற்றும் அவரது சிலை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முரண்பட்ட துருவங்களின் சுவாரசியமான இணைப்பாக, தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரபலங்கள் ஒன்றாக கலந்து கொண்டனர்.
ரஜினியும், கமலும் ஒன்றாக மேடையில் அருகருகே அமர்ந்திருக்க, மணிமண்டபத்தை தமிழகத்தின் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அதிகாரபூர்வமாகத் திறந்து வைத்தார். சிவாஜி குடும்பத்தினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிவாஜி கணேசனின் சிலை – கோப்புப் படம்…
ரஜினிக்கு ஓ.பன்னீர் செல்வம் பொன்னாடை போர்த்தி கௌரவிக்க, கமலுக்கு அமைச்சர் ஜெயகுமார் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். சில நாட்களுக்கு முன்னர்தான் ஜெயகுமார், அரசியல் ரீதியாக கமல்ஹாசனைத் தாக்கிப் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரபு, சிவாஜியின் சிலையைத் திறந்து வைத்தது கலைஞர் கருணாநிதி என்றும், அந்தத் தகவலை அந்தச் சிலையின் பீடத்தில் பொறிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். தனது தந்தை சிவாஜி கணேசன் அரசியலுக்கு அப்பாற்பட்ட கலைஞர் என்பதால் இதைச் செய்யுமாறு தமிழக அரசைக் கேட்டுக் கொண்ட பிரபு, மணிமண்டபத்தில் அனைத்து கலைஞர்களும் தனது தந்தையோடு இருக்கும் புகைப்படங்களை வைக்குமாறும் கேட்டுக் கொண்டார்.