மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவரும், அமைச்சருமான டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகத்தின் நினைவாக, அவரது குடும்பத்தினரின் ஆதரவோடு, மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சிறந்த மலேசியத் தமிழ் நூல்களை, ஒவ்வொரு முறையும், ஒரு துறையில் தேர்ந்தெடுத்து பரிசுகள் வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2017-ஆம் ஆண்டுக்கான டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகம் புத்தகப் பரிசுத் திட்ட வெற்றியாளராக நாட்டின் மூத்த எழுத்தாளரும் கவிஞருமான வீரமான் (76) அறிவிக்கப்பட்டார்.
வீரமானுக்கு இதரப் பரிசுகளோடு, ஏழாயிரம் ரிங்கிட் ரொக்கப் பணமும் வழங்கப்பட்டது. நேற்று புதன்கிழமை (4 அக்டோபர் 2017) தலைநகர் தங்கும் விடுதி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் அப்பரிசுகளை வீரமானுக்கு வழங்கினார்.
மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், அமரர் டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு இவ்வாண்டோடு 16-வது ஆண்டாக இந்தப் பரிசளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
2012 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை நூல் வடிவம் கண்ட மரபுக் கவிதை நூல்களில் சிறந்த நூலுக்குப் பரிசு வழங்கப்படும் என ஏற்கனவே தேர்வுக் குழு அறிவித்திருந்தது.
அதன்படி, கவிஞர் வீரமானின் “வீரமான் கவிதைகள்” எனும் நூல் பரிசுக்குத் தேர்வுப் பெற்றது என தேர்வுக்குத் தலைமையேற்றிருந்த பேராசிரியர் சபாபதி நூலுக்கான தமது ஆய்வுரையில் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் திரு. பெ. இராஜேந்திரன், டான்ஸ்ரீ வெ. மாணிக்கவாசகத்தின் சகோதரரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோ வி.எல். காந்தன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
“தமிழறிஞர்களின் நினைவாகவும் நூல் வெளியிடுங்கள்” டாக்டர் சுப்ரா வேண்டுகோள்
டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் புத்தகப் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய டாக்டர் சுப்ரா “மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், இந்நாட்டில் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும், தமிழ் இலக்கிய மேம்பாட்டுக்காகவும் பாடுபட்ட தமிழ் அறிஞர்களின் நினைவாகவும் விருதுகள் வழங்குவது குறித்துப் பரிசீலிக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்.
இவ்வாறு செய்வதன் மூலம் இன்றைய இளைய தலைமுறையினர் மலேசியாவில் தமிழுக்காக சேவையாற்றியவர்கள் குறித்துத் தெரிந்து கொள்வதோடு, என்றும் அவர்களை நினைவில் வைத்திருக்கவும் இது உதவும் என சுகாதார அமைச்சருமான அவர் தெரிவித்தார்.