கோலாலம்பூர் – முஸ்லிம் மட்டும் சலவை நிலையம் (லாண்டரி) குறித்த ஜோகூர் சுல்தானின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விமர்சித்ததோடு, சீனர்களை இழிவுபடுத்தும் விதமாகப் பேசிய இஸ்லாம் மதபோதகர் ஜமிஹான் மட் ஜின் நேற்று புதன்கிழமை காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலம் தெங்கு அம்புவான் ஜெமாவில் மசூதியில் நடந்த சமய விரிவுரையில், ஜாமிஹான் ஜோகூர் சுல்தானை விமர்சித்ததாகக் கூறப்படுகின்றது.
ஜாமிஹான் விரிவுரையாற்றும் அந்தக் காணொளியும் யுடியூப்பில் பகிரப்பட்டிருக்கிறது.
அண்மையில் மூவாரில் அறிமுகம் செய்யப்பட்ட முஸ்லிம் மட்டும் கொள்கை கொண்ட சலவை நிலையத்தை ஜோகூர் சுல்தான் தடுத்தது தவறு என்று ஜாமிஹான் அக்காணொளியில் கூறியிருக்கிறார்.
மேலும், சீனர்கள் “சுத்தமற்றவர்கள்” என்று குறிப்பிட்டிருக்கும் ஜாமிஹான், அவர்கள் மது அருந்துவது, பன்றி இறைச்சி உண்பது உள்ளிட்ட பல இனவாதக் கருத்துகளைப் பேசியிருக்கிறார்.
அதனால் தான் சீனர்கள் சலவை செய்யும் கடையில் முஸ்லிம்கள் தங்கள் ஆடைகளைச் சலவை செய்ய விரும்பவில்லை என்றும் ஜாமிஹான் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜாமிஹானின் இக்கருத்திற்காக நேற்று புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் டாங் வாங்கி காவல்துறைத் தலைமையகத்தில் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.