கோலாலம்பூர் – கிராமப்புறத் திட்டங்களில் இருந்து 1.5 பில்லியன் ரிங்கிட் மோசடி செய்ததாக தனது இளைய சகோதரர் ஹமிட் குற்றம் சாட்டப்பட்டிருப்பதால், எந்த நேரத்திலும் தான் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) விசாரணைக்கு அழைக்கப்படலாம் என முன்னாள் கிராமப்புற மற்றும் வட்டார மேம்பாட்டு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஷாபி அப்டால் கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதால் பார்ட்டி வாரிசான் சபா தலைவரான ஷாபி அப்டால் இதனை உள்நோக்குடன் தனது ஆதரவாளர்களுக்கு அனுப்பி வருகின்றார்.
கடந்த 2009-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையில், சபா மாநிலத்தில் 350 கிராமப்புற நீர், மின் மற்றும் சாலைப் போக்குவரத்துத் திட்டங்களுக்காக 7.5 பில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் ஒதுக்கியிருந்தது.
அந்த சமயத்தில் ஷாபி தான் அத்துறையின் அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்ட சஃபியின் சகோதரர் ஹமிடி (வயது 52) நேற்று புதன்கிழமை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அவருக்கு நீதிபதி 5 நாட்கள் தடுப்புக் காவல் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக, சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்ட வாரிசான் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் முகமட் அசிஸ் ஜம்மான், அம்னோ இளைஞர் பகுதியின் தகவல் பிரிவுத் தலைவர் ஜமாவி ஜபார், தாவாவ் அம்னோ தொகுதியின் இளைஞர் பகுதித் தலைவர் அரிபின் காசிம்,சபா வாரிசானின் உதவித் தலைவர்களில் ஒருவரான பீட்டர் அந்தோணி ஆகியோர் இன்னும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.