சென்னை – விஜய் படம் என்றாலே எதிர்பார்ப்பும், பரபரப்பும் பற்றிக் கொள்ளும் என்பதோடு, வெளியாகும் தருணத்தில் சில தடைகளையும் சந்திக்கும் என்பது நிரந்தர உண்மையாகிவிட்டது. ‘மெர்சல்’ பெயரைப் பயன்படுத்தக் கூடாது எனத் தொடுக்கப்பட்ட வழக்கு முதல் தடையாக வந்தது. ஆனால் அந்த வழக்கு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.
அடுத்து தமிழக அரசின் கூடுதல் கேளிக்கை வரியினால் புதிய தமிழ்ப் படங்கள் வெளியீடு இல்லை என படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அதிரடியாக அறிவிக்க, அதனால் தீபாவளிக்குள் படம் வெளியாகுமா என்ற சிக்கல் எழுந்தது.
தமிழக அரசு கேளிக்கை வரியைக் குறைத்துக் கொள்ள நேற்று முன்வந்ததை அடுத்து, இனி புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகும் என அறிவித்த விஷால், தீபாவளி தினத்தன்று மெர்சல் வெளியாகும் என்ற இனிப்பான செய்தியை சினிமா இரசிகர்களுக்கு, குறிப்பாக விஜய் இரசிகர்களுக்கு வழங்கியிருக்கிறார்.
மலேசியாவிலும் ஏறத்தாழ 120 திரையரங்குகளில் வெளியீடு காண்கிறது ‘மெர்சல்’.
இதற்கிடையில், மெர்சல் படத்தின் அதிகாரபூர்வ முன்னோட்டம் 28 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து, தமிழ்ப் படங்களிலேயே மிக அதிகமாகப் பார்க்கப்பட்ட முன்னோட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
மெர்சல் படத்தின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்:-