கிள்ளான் – குழந்தைகள் பிறந்தவுடன் 60 நாட்களுக்குள் பிறப்புப் பத்திரம் எடுக்காவிட்டால், 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு சிலாங்கூர், ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்திருக்கிறார்.
“பாரிசான் அரசும், தேசியப் பதிவு இலாக்காவும், அதன் இயலாமைக்கு மக்களைத் தண்டிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். மக்களின் குறைகளைச் செவிமெடுக்காத செவிடர்களால் மட்டுமே, பிறப்புப் பதிவு காலதாமதத்துக்கு 1000 ரிங்கிட் அபராதம் விதிக்க முடியும்” என நேற்று சனிக்கிழமை வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
“இது எரியும் நெருப்பில் எண்ணெய் விடுவதற்கு ஒப்பாகும். மக்கள் ஏழ்மையிலும் எண்ணற்ற குடும்பச் சிக்கல்களிலும் அல்லல்படும் வேளையில், இது மாதிரியான பிற்போக்கு சட்டங்கள் நாட்டு மக்களுக்கு மேலும் சுமையை அளிப்பதாக இருக்கும். இதனால் அடையாளப் பத்திரங்கள் இல்லாதோர் எண்ணிக்கை எவ்வகையிலும் குறையாது, அவ்விவகாரம் மேலும் அதிகரிக்கவே செய்யும். ஒரு நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடந்தால், அந்த அரசாங்கத்தின் எண்ணம் எப்படி எல்லாம் மக்கள் விரோதமானதாக இருக்கிறதோ அப்படித்தான் அதன் திட்டங்களும், சட்டங்களும் அமையும் என்பதற்கு இந்தச் சட்டம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்றும் சேவியர் மேலும் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்தான், இந்நாட்டில் அடையாள அட்டை முறை அறிமுகப்படுத்தப் பட்டது என்ற அவர், ஆனால் அவர்களின் சொந்த நாடான பிரிட்டனில் அப்படிப்பட்ட பதிவு முறை ஒன்று அன்று இல்லையே ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
“அவர்கள் நாட்டில் இல்லாத ஒன்றை இங்கு நடைமுறை படுத்தியதற்குக் காரணம் என்ன? இந்நாட்டு மக்களை எதிரிகளாகவும், ஒவ்வொருவரையும் கம்யூனிஸ்ட் போராளிகளாக அல்லது கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களாக நினைத்து அஞ்சியதால், கொண்டு வரப்பட்டது இந்த சட்டம்.
மலேசியாவில் பிறப்பு பதிவு சட்டம், கள்ளக் குடியேறிகளைத் தடுக்க என்பது, இன்று வாய் விட்டுச் சிரிக்க வேண்டிய சிறந்த நகைச்சுவையாகும். இந்நாட்டில் சில தலை முறைகள் பிறந்து வளர்ந்து விட்டபோதிலும், இங்கே, அவர்களின் பிள்ளைகளுக்கு அடையாளப் பத்திரப் பிரச்சனை உண்டு. ஆனால் இந்நாட்டில் பிறக்காதவர்கள், அடையாளப் பத்திரங்களையும் பெற்றுக்கொண்டு, பற்பல சலுகைகளை இங்கே அனுபவிப்பது எப்படி? பதவிகளை அனுபவிப்பது எப்படி? என்பதற்குத் தேசியப் பதிவுத்துறை பதிலளிக்குமா?” என்றும் சேவியர் ஜெயகுமார் வினா எழுப்பினார்
“முக்கியமாக இந்நாட்டின் உள்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான அகமட் சாஹிட் ஹமிடி இந்நாட்டில் எங்கு பிறந்தார் அல்லது எந்த ஆரம்பப் பள்ளியில் கல்வி கற்றார் என்று எவரால் கூற முடியும்? அல்லது சிலாங்கூரின் முன்னாள் மந்திரி புசார் கிர்தோயோ பற்றிய முழு வரலாற்றைத்தான் எவரும் கூற முடியுமா? அவர்களைப் போன்று இன்னும் எத்தனையோ ஆயிரம் பேர் இங்கு அரசாங்க உபகாரச் சம்பளங்களுடன் கல்வி பயின்று பதவி வகிக்கிறார்கள், இதன் அர்த்தம் என்ன?” என்றும் தனது அறிக்கையில் சேவியர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
“இது போன்ற பரிந்துரைகளை தேசிய முன்னணி அரசைத் தவிர மக்கள் நட்பை, மக்கள் நலனைப் பேணும் வேறு எந்த அரசாலும் முன்னெடுக்க முடியாது. ஆயிரம் வெள்ளி அபராதம் என்பது ஒரு தண்டனை! அந்தத் தண்டனையை விதிப்பதற்கு முன், அந்தக் குடும்பம் ஒரு தவறைச் செய்ய முக்கியக் காரணமாக அமைந்தது என்ன ? அதற்கு யாரெல்லாம், எதுவெல்லாம் காரணமாகிறது என்பதனைத் தேசியப் பதிவு இலாகா ஆய்வு செய்ததா? அதனைப் பட்டியலிட முடியுமா ?
இன்று ஏழ்மையின் காரணமாக அதிகமான பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டியுள்ளது, கணவர்கள் வெளி ஊர்களில், வெளி நாடுகளில் வேலைக்குச் சொல்கின்றனர், மணவிலக்கு சம்பவங்கள் அதிகம், அதனால் கணவர்களின் அடையாள அட்டையைத் தாய்மார்கள் தேசியப் பதிவு இலாகா அலுவலகங்களில் சமர்ப்பிக்க முடிவதில்லை. ஒரு தாய் தன் கணவரின் அடையாள அட்டையைக் குறித்த நேரத்தில் வழங்க முடியாத பட்சத்தில் தேசியப் பதிவு இலாகா வழங்கிய திருமணப் பதிவு சான்றிதழை ஏன் மாற்று சான்றாக ஏற்று கொள்வதில்லை?” எனவும் சேவியர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.
“முறையாகப் பதிவு செய்தால் சன்மானம் வழங்கலாமே?”
“ஏன், பிறப்புப் பதிவை மற்ற வகைகளிலும் ஊக்கப் படுத்தலாமே? பிறப்பைப் பதியும் பாரங்களை மலாய் மொழியில் பூர்த்தி செய்யும் ஆற்றல் இல்லாதவர்களும் உண்டு. ஆகையால், பாரங்கள் ஆங்கிலம், தமிழ், சீன மொழிகளில் பூர்த்தி செய்யவும், பதியும் பாரங்களை மலாய் மொழியில் பூர்த்தி செய்யும் சேவைகளைப் பிரசவ மருத்துவ மனைகளிலும், பிறப்பைப் பதிவு செய்யும் அதிகாரத்தைப் போலீஸ் நிலையங்களுக்கும் விரிவு படுத்தலாமே! அபராதம் விதிப்பதற்குப் பதில் சன்மானம் வழங்கலாமே? இரண்டு வாரங்களுக்குள் குழந்தை பிறப்பைப் பதிவுசெய்தால் அவர்களுக்கு வெள்ளி 500 சன்மானமாக அறிவிக்கலாமே! ஆக, இப்படிப்பட்ட சட்டங்கள் நாடாளுமன்றத்தில் முழுமையாக விவாதிக்கப்பட வேண்டும், பதிவை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்தப் பிறப்பு பதிவு, கல்வியறிவற்ற, ஏழை மக்களைச் சுற்றிவிடும் பகடையாக இந்த அரசாங்கமும், அதிகாரிகளும் பயன்படுத்துகிறார்கள். இந்தப் பெரிய அபராதத் தொகை தேசியப் பதிவு இலாகாவில் ஊழலையே வளர்க்க உதவும், மக்களுக்குப் பயன்தராது” என்றும் சேவியர் ஜெயக்குமார் தனது அறிக்கையில் கடுமையாகச் சாடியுள்ளார்.