Home வணிகம்/தொழில் நுட்பம் 8 பில்லியன் டாலர் செலவிடப்போகும் நெட்பிலிக்ஸ்!

8 பில்லியன் டாலர் செலவிடப்போகும் நெட்பிலிக்ஸ்!

1113
0
SHARE
Ad

netflix-logoலோஸ் கத்தோஸ் (கலிபோர்னியா) – உலகின் மிகப் பெரிய இணையத் தொலைக்காட்சி அலைவரிசையாகத் திகழ்வது நெட்பிலிக்ஸ் (Netflix Inc.) அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள லோஸ் கத்தோஸ் நகரில் தனது தலைமை நிறுவனத்தைக் கொண்டு செயல்படும் இந்நிறுவனம் அடுத்தாண்டில் தனது வணிக விரிவாக்கத்திற்கு சுமார் 8 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப் போவதாக அறிவித்து, தனது போட்டியாளர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

அதிக அளவில் முதலீடு செய்வதன் மூலமே கூடுதலாக வருமானம் ஈட்ட முடியும் என்ற வணிக தாரக மந்திரத்தைச் செயல்படுத்தும் நோக்கில் நெட்பிலிக்ஸ் தனது வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நோக்கில் ஒரு வாரத்துக்கு ஒரு புதிய திரைப்படத்தைத் திரையிடப் போவதாகவும் நெட்பிலிக்ஸ் அறிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

2017-ஆம் ஆண்டை விட மூன்று மடங்கு கூடுதலாக நெட்பிலிக்ஸ் எதிர்வரும் 2018-ஆம் ஆண்டில் தனது உள்ளடக்கத் தயாரிப்புகளுக்காக செலவிட உத்தேசித்துள்ளது.

ஏறத்தாழ 1 பில்லியன் அமெரிக்க டாலரை விளம்பரங்களுக்காகப் பயன்படுத்துவதற்காகவும் நெட்பிலிக்ஸ் ஒதுக்கீடு செய்யவிருக்கிறது.

இந்த முதலீடுகள் எல்லாம் தற்போது முன்னணியில் இருக்கும் மற்றொரு தொலைக்காட்சி நிறுவனமான எச்பிஓ (HBO) செலவிடும் முதலீடுகளை விட பன்மடங்கு அதிகமாகும்.

நெட்பிலிக்ஸ் சேவைக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அந்நிறுவனம் அறிவித்திருப்பதோடு, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்காகவும், திரைப்படங்களுக்காகவும் தனது நீண்ட கால ஒதுக்கீடாக 17 பில்லியன் அமெரிக்க டாலரை ஒதுக்கியிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

அடுத்தாண்டு செலவிடப்போகும் 8 பில்லியன் அமெரிக்க டாலரில் 80 புதிய, பிரத்தியேகப் படங்களைத் தயாரிக்க நெட்பிலிக்ஸ் திட்டமிட்டுள்ளது.

ஹாலிவுட்டின் முன்னணி திரைப்படத் தயாரிப்பு நிறுவனங்களான டிஸ்னி, வார்னர் பிரதர்ஸ், யுனிவர்சல் பிக்சர்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்களும் அடுத்தாண்டு தயாரிக்கப் போகும் திரைப்படங்களின் மொத்த எண்ணிக்கையை விட நெட்பிலிக்ஸ் நிறுவனத்தின் சொந்த, பிரத்தியேக (ஒரிஜினல்) திரைப்படங்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அமெரிக்காவுக்கு வெளியே தற்போது 56 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் நெட்பிலிக்ஸ் தற்போது மற்ற மொழிகளிலும் திரைப்படங்களைத் தயாரிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறது. இதன் மூலம் மேலும் கூடுதலான வாடிக்கையாளர்களைக் கவர முடியும் என்றும் நம்புகிறது.

SelliyalAD-Std