கோலாலம்பூர் – மலேசியாவின் ஒவ்வொரு இனமும் கொண்டாடும் பெருநாளின்போது அந்தப் பெருநாளின் சிறப்பு அம்சங்களையும், கலாச்சார நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் வண்ணம் விளம்பரக் காணொளிகளை வெளியிடுவது பெட்ரோனாஸ் நிறுவனத்தின் வழக்கமாகும்.
அந்த வகையில் 2017-ஆம் ஆண்டு தீபாவளியைக் கொண்டாடும் வகையில் பெட்ரோனாஸ் வெளியிட்டிருக்கும் சுமார் நான்கரை நிமிட விளம்பரக் காணொளி தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், யூடியூப் இணையத் தளத்திலும், நட்பு ஊடகங்களிலும் உலா வந்து கலக்கிக் கொண்டிருக்கிறது.
இந்த விளம்பரக் காணொளியின் சுருக்கம் இந்த ஆண்டுக்கான பெட்ரோனாஸ் தீபாவளி விளம்பரமாகவும் ஒளியேறி வருகிறது.
12 வயது மாணவியான ஆரத்திக்கு அவளது பள்ளி வகுப்புத் தோழர்களுடன் ஏன் மனவருத்தம் ஏற்படுகிறது என்பதில் தொடங்குகிறது இந்தக் குறும்படம். பின்னர் சக தோழர்கள் தீபாவளித் திருநாளுக்கு அவளது வீட்டுக்கு வந்து மன்னிப்பு கேட்க, மனம் மாறிய ஆரத்தி மீண்டும் தன் தோழர்கள், தோழியருடன் இணைவதை சிறிய கவிதையாக – சிறு பிஞ்சுள்ளங்களின் மன ஓட்டத்தோடு இணைந்து, அவர்களின் பார்வையில் திரையில் காட்சிகளாக விரிகிறது இந்த விளம்பரப் படம்.
அந்தக் குறும்படத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் கண்டு மகிழலாம்: