கோத்தாகினபாலு – புலி வரப் போகிறது, வரப் போகிறது என்று கூறப்பட்ட ஆரூடங்கள் இறுதியில் நடந்தேறி விட்டது. அம்னோவின் முன்னாள் உதவித் தலைவரும், அம்னோவிலிருந்து விலகி, சபாவில் பார்ட்டி வாரிசான் சபா என்ற கட்சியின் தலைவராகத் தற்போது செயல்பட்டுக் கொண்டிருப்பவருமான ஷாமி அப்டால் இன்று இரவு 9.00 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டார்.
ஏறத்தாழ மாலை 5.00 மணிக்கு வாக்குமூலம் வழங்குவதற்காக கோத்தாகினபாலுவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு வருகை தந்த ஷாபி அப்டால், சில மணி நேர விசாரணைகளுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார்.
சபா மாநிலத்திலுள்ள செம்பூர்ணா நாடாளுமன்ற உறுப்பினருமான ஷாபி அப்டால், கோத்தா கினபாலு விமான நிலையம் வந்தடைந்த பின்னர் நேரடியாகத் தனது வழக்கறிஞர்களுடன் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் மாநிலத் தலைமையகம் வந்தடைந்தார்.
சபா மாநிலத்தில் 1.5 பில்லியன் ரிங்கிட் ஊழல் நடைபெற்றிருக்கிறது என்ற புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்தும், ஷாபி அப்டாலின் குடும்ப உறுப்பினர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்தும், அடுத்த இலக்கு ஷாபிதான் என்ற ஆரூடங்கள் எழுந்தன.
அடுத்ததாகத் தான் கைது செய்யப்படலாம் என ஷாபி அப்டாலே கருத்து தெரிவித்திருந்தார்.
அம்னோவின் உதவித் தலைவரும் வட்டார மேம்பாட்டு அமைச்சருமான ஷாபி, 1எம்டிபி விவகாரம் குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு எதிரான நிலைப்பாடு எடுத்ததைத் தொடர்ந்து அவர் அம்னோவிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
ஷாபியின் இளைய சகோதரர்கள் ஹாமிட் மற்றும் யூசோப் அப்டால் ஏற்கனவே மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யபட்டிருக்கின்றனர்.