கோலாலம்பூர் -‘சென்னையில் ஒரு நாள்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக ஜேபிஆர் இயக்கத்தில், சரத்குமார் நடிப்பில், ‘சென்னையில் ஒரு நாள் 2’ திரைப்படம் வெளியாகியிருக்கிறது.
“ஏஞ்சலின் மரணம் இன்றா? நாளையா?” இந்த ஒரு வாசகம் கொண்ட போஸ்டர் நகரம் முழுவதும் மர்ம நபரால் ஒட்டப்படுகிறது.
சிலர் அதனை விளையாட்டாக எடுத்துக் கொள்ள, உயர் போலீஸ் அதிகாரியான நெப்போலியன் அதனை சற்று தீவிரமாக எடுத்துக் கொண்டு அதனை விசாரணை செய்யும் பொறுப்பை மற்றொரு அதிகாரியான சரத்குமாரிடம் ஒப்படைக்கிறார்.
சரத்குமார் அதனை விசாரணை செய்யத் தொடங்கும் போது ஏஞ்சல் என்ற பெண் பற்றித் தெரிய வருகின்றது. ஏஞ்சலைத் தேடி விசாரணை செல்கையில் அந்த வழக்கு அப்படியே சங்கிலி போல் தொடர்ந்து அவரது வீட்டுக்குள்ளும் வருகிறது.
விபத்தில் இறந்த தனது அண்ணன் – அண்ணியின் பிள்ளைகளை தனது பிள்ளைகளாக வளர்த்து வரும் சரத்குமார், ஏஞ்சலுக்கும் அவர்களுக்கும் எதோ ஒரு தொடர்பு இருப்பதைக் கண்டுபிடிக்கிறார்.
இந்த வழக்கில் திடீர் திருப்பமாக ஒரு கொலை நடக்கிறது. அந்த கொலையைச் செய்தது யார்? என்பதை சரத்குமார் கண்டறிகிறாரா? ஏஞ்சலுக்கும் அந்தக் கொலைக்கும் என்ன சம்பந்தம்? என்ற முடிச்சுகள் அவிழ்க்கப்படுவதே படத்தின் பிற்பாதி சுவாரசியம்.
சரத்குமார்.. போலீஸ் அதிகாரியாக அதே கம்பீரம். வயதிற்கேற்ப தனது கதாப்பாத்திரத்திலும், வசனங்களிலும் முதிர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடன் படம் முழுவதும் வரும் முனீஸ்காந்த் கொஞ்சம் காமெடியும், குணச்சித்திர வேடமுமாக நடித்திருக்கிறார்.
ஏஞ்சலின் யார்? என்ற கேள்வியிலிருந்து தொடங்கும் திரைக்கதை விறுவிறுப்பு மாறாமல் முதற்பாதி முழுவதும் நகர்வது ரசிக்க வைக்கின்றது.
அதிலும் சுகாசினியின் அந்த மனநலக் காப்பகக் காட்சி அலற வைக்கிறது.
இரண்டாவது பாதியில், முடிச்சுகள் அவிழும் போது தொய்வடையத் தொடங்கும் திரைக்கதை, கிளைமாக்ஸ் காட்சியில் அதே பழைய மசாலாப் படங்களின் பாணியில் முடித்திருப்பது சலிப்பை ஏற்படுத்துகிறது.
இரண்டாம் பாதியில், திடீரென மூளையின் நினைவுத்திறன் தூண்டும் மரபணு என்றெல்லாம் சொல்ல நினைத்து அதற்காக ஒரு பின்னணி கதையெல்லாம் சொல்லிய விதம் படத்தின் தீவிரத்தை திடீரெனக் குறைப்பது போல் தெரிகிறது.
அதிலும் அனிமேசனில் சொல்ல முயற்சி செய்திருப்பது சலிப்பையே ஏற்படுத்துகிறது.
கொடூரக் கொலைகாரனை, பொம்மைத் துப்பாக்கி வைத்து மிரட்டி, “நான் போலீஸ்காரன் புள்ள டா”-ன்னு சொல்றது, வில்லனே தான் செய்த கொலைக்கான திட்டங்களை எல்லாம் ஏதோ விருது வாங்கியது போல் ஒப்புவிப்பது எல்லாம் அதர பழசான சமாச்சாரங்கள்.
சரத்குமாரின் பிள்ளைகளாக வரும் மூவருமே புதுமுகம் என்பதோடு, நடிப்பிலும் இயல்பாகத் தெரியாதது படத்திற்கு மிகப் பெரிய பலவீனமாக இருக்கிறது. சரத்குமார், நெப்போலியன், முனீஸ்காந்த், சுஹாசினியைத் தவிர இன்னும் சில தெரிந்த முகங்களைப் பயன்படுத்தியிருக்கலாம்.
விஜய் தீபக்கின் ஒளிப்பதிவும், ஜேக்ஸ் பிஜோயின் பின்னணி இசையும் படத்திற்கு பக்கபலம் சேர்த்திருக்கிறது. குறிப்பாக ஜேக்சின் பின்னணி இசை காட்சிகளுக்கு வீரியம் சேர்த்து திரையரங்கை அதிரச் செய்கிறது.
‘சென்னையில் ஒருநாள்’ முதல் பாகத்தில் சொல்லப்பட்ட ஒரு அழுத்தமான கதைக்கரு இரண்டாம் பாதியில் இல்லை என்ற மனநிலையே ஏற்படுகின்றது.
என்றாலும், ‘சென்னையில் ஒருநாள் 2’ – விறுவிறுப்பும், திகிலும் நிறைந்த துப்பறியும் படமாக பார்த்து ரசிக்கலாம்.
-ஃபீனிக்ஸ்தாசன்