
கோத்தா கினபாலு – கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்ட டத்தோஸ்ரீ ஷாபி அப்டாலின் இல்லம் இன்று சனிக்கிழமை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் அதிரடியாக சோதனையிடப்பட்டது.
கைது செய்யப்பட்டதும் உயர் இரத்த அழுத்தப் பிரச்சனையால் கோத்தா கினபாலு எலிசபெத் ராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் இன்று மருத்துவமனையிலிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து அவரது இல்லத்தின் மீது சோதனை நடவடிக்கைகளை ஊழல் தடுப்பு ஆணையத்தினர் மேற்கொண்டனர்.
ஷாபிக்கு எதிராக 4 நாட்கள் தடுப்புக் காவல் உத்தரவை ஊழல் தடுப்பு ஆணையம் நீதிமன்றத்தில் பெற்றது. எனினும் இரண்டு நாட்கள் அவர் மருத்துவமனையில் இருந்தார்.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அவர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியதும் உடனடியாக அவர் அவரது இல்லத்திற்குக் கொண்டு செல்லப்பட்டார். அவரது இல்லத்தில் சோதனைகள் முடிவடைந்ததும் அவர் மீண்டும் ஊழல் தடுப்பு ஆணைய அலுவலகத்திற்கு விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்டார்.