புதுடெல்லி – உலக நாடுகளுக்குக் கட்டுப்படாமல் அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளைத் தொடர்ந்து நடத்தி வரும் வடகொரியாவைத் தனிமைப்படுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கும் அமெரிக்கா, நட்பு நாடுகளின் ஆதரவைச் சேகரித்து வருகின்றது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை டெல்லியில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜைச் சந்தித்த அமெரிக்கச் செயலாளர் ரெக்ஸ் டில்லெர்சன், இந்திய இராணுவத்தை நவீனமயமாக்கத் தேவையான அனைத்து சிறந்த தொழில்நுட்பங்களையும் அமெரிக்கா இந்தியாவிற்கு வழங்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனிடையே, வடகொரியாவில் இருக்கும் இந்தியத் தூதரகம் குறித்தப் பேச்சுவார்த்தையின் போது, அங்கிருக்கும் இந்தியத் தூதரகத்தைத் தொடர்ந்து இந்தியா தக்க வைத்துக் கொள்ளவிருப்பதாகவும், அப்போது தான் இரு நாடுகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து இருக்கும் என்றும், இந்திய வெளியுறவுத்துறை சுஷ்மா சுவராஜ், ரெக்ஸ் டில்லெர்சனிடம் தெரிவித்திருக்கிறார்.