Home நாடு வரவு- செலவுத் திட்டம் : இந்திய சமுதாயத்திற்கு என்ன கிடைக்கும்?

வரவு- செலவுத் திட்டம் : இந்திய சமுதாயத்திற்கு என்ன கிடைக்கும்?

816
0
SHARE
Ad

Budget2018-03கோலாலம்பூர் – இன்று பிற்பகல் 4.00 மணியளவில் பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சமர்ப்பிக்கப்படவிருக்கும் 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் இந்தியர்களுக்கு என்னென்ன சாதகங்கள், பலன்கள் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் இந்திய சமுதாயத்தில் எழுந்துள்ளது.

மூன்று கோணங்களில் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இந்தியர்களுக்குப் பலனளிக்கும் விதத்தில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவது, மலேசிய சமுதாய அமைப்பில், நாட்டின் வளர்ச்சிக்கு சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்ட இந்தியர்கள் மிகவும் பின்தங்கி இருப்பதும், பல சமூக சீர்கேடு சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருப்பதும், ஆய்வுகள், அனுபவங்களின் மூலமாக ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன.

najib-budget-speech
கடந்த ஆண்டு 2017-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிரதமர் நஜிப் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த கோப்புப் படம்…
#TamilSchoolmychoice

இவர்கள் பின் தங்கியிருக்கும் காரணத்தால், ஒட்டுமொத்த மலேசியர்கள் மத்தியிலும் எதிர்மறையான பார்வைகள் எழுந்திருக்கின்றன என்பதாலும், மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளால் மலேசிய சமுதாய அமைப்பும் சில பாதகங்களை, குறிப்பாக அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் போன்றவற்றின் காரணமாக சில பாதிப்புகளை சந்தித்து வருகிறது என்பதால், இந்திய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டிய கடப்பாட்டினை அரசாங்கம் உணர்ந்திருக்கிறது. இதன் காரணமாக இந்திய சமுதாயத்திற்கு சில கூடுதல் சலுகைகள் கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.

ஏற்கனவே, மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் என்ற பெயரில் இந்தியர்களுக்கான சிறப்பு வியூகப் பெருந்திட்டத்தை அறிவித்திருக்கும் தேசிய முன்னணி அரசு, அந்த அமைப்பின் கீழ் மேலும் சில அறிவிப்புகளை இந்தியர்களுக்குப் பயன்தரும் விதத்தில் இன்றைய வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.

பி-40, அடித்தட்டு மக்களை முன்னேற்றும் திட்டங்கள்

இரண்டாவது கோணத்தில் பார்த்தால், நஜிப்பின் பொருளாதார மாற்றத்திற்கான இலக்குகளில் ஒன்று பி-40 (B-40) எனப்படும் 40 சதவீத அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலைமையை வலுப்படுத்துவதாகும். இந்த இலக்கினைக் கருத்தில் கொண்டு நஜிப்பின் வரவு செலவுத் திட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அடிப்படையில், பி-40 அடித்தட்டு மக்களுக்கான சமூக நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டால் அதன் மூலமும் இந்திய சமுதாயத்திற்குப் பெரும்பயன்கள் விளையும் என்றும் நம்பப்படுகிறது.

மூன்றாவது கோணத்தில் பார்த்தால், 14-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் அரசியல் ரீதியாக, இந்தியர்களின் வாக்குகள் மிக முக்கியமானவையாக பார்க்கப்படுகின்றன. மலாய் வாக்குகள் கடுமையாகப் பிளவு காணும் என்பதாலும், சீன வாக்குகள் எதிர்க்கட்சிகள் பக்கம் செல்லும் என்பதாலும், சொற்பமான இந்தியர் வாக்குகள் கிடைத்தாலும் பல சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் தேசிய முன்னணி வெல்ல முடியும்.மீண்டும் ஆட்சியையும் அமைக்க முடியும்.

எனவே, பொதுத் தேர்தலுக்கு முன்பாக சமர்ப்பிக்கப்படும் கடைசி வரவு செலவுத் திட்டம் என்பதால் இந்தியர்களைக் கவரும் வண்ணம், சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை பிரதமர் வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன் செல்லியலில் வெளியிடப்படும்.

செல்லியல் குறுஞ்செயலியை தங்களின் செல்பேசிகளில் பதிவிறக்கம் செய்துள்ளவர்களுக்கு இந்தத் தகவல்கள் குறுஞ்செய்திகளாக உடனுக்குடன் பகிரப்படும்.

-இரா.முத்தரசன்