ஜோர்ஜ் டவுன் – பினாங்கில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கச் சென்ற அமானா ராக்யாட் கட்சியின் பினாங்கு மாநிலத் தலைவரும் தேசிய உதவித் தலைவருமான டத்தோ டாக்டர் முஜாஹிட் யூசோப் ராவாவின் (படம்) படகு கவிழ்ந்தது. இருப்பினும் அவரும் அவருடன் சென்றவர்களும் உயிர் தப்பினர்.
இச்சம்பவம் நேற்று நண்பகலில் கம்போங் சுங்கை கோரோக் என்னுமிடத்தில் நிகழ்ந்தது. வெளித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களையும் உணவுப் பொருட்களையும் ஏற்றிக்கொண்டு தாமும் பேராக் மாநில அமானா தலைவரும் தேசியப் பொருளாளருமான அஸ்முனி பின் ஹவியும் மேலும் சிலரும் சென்ற படகு ஒரு பக்க பாரத்தின் காரணமாக கவிழ்ந்திருக்கலாம் என்று பேரா பாரிட் புந்தார் நாடாளுமன்ற உறுப்பினருமான முஜாஹிட் சொன்னார்.
தாங்கள் பயணம் செய்த படகு கவிழும்போது அதில் இருபது உணவுப் பெட்டிகளும் வேறு சில அடிப்படைப் பொருட்களும் இருந்ததாக அவர் சொன்னார்
தோளில் மாட்டும் தமது பையில் வைக்கப்பட்டிருந்த கைபேசி, பணப்பை,வேறு சில ஆவணங்கள் நீரில் மூழ்கியதாக அவர் கூறினார்.சுங்கை செங்காங் அருகில் அக்கம்பம் அமைந்திருபபதால் அந்தப் பகுதியில் நீர் மட்டம் இரண்டு மீட்டரை தாண்டியிருந்தது.நீரில் விழுந்த அவர்களை அருகிலுள்ள கிராம வாசிகள் காப்பாற்றி பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு வந்தனர்.
-க.மு.ஆய்தன்