லாஸ் ஏஞ்சல்ஸ் – அமெரிக்கர்களின் உயர் இரத்த அழுத்தம் சராசரியாக 140/ 90 இருக்க வேண்டும் என்ற முந்தையை அளவை மாற்றி நேற்று திங்கட்கிழமை முதல் 130/80 எம்எம் ஆக இருக்க வேண்டுமென அமெரிக்க இருதய சங்கம் நிர்ணயம் செய்திருக்கிறது.
அமெரிக்காவில் தற்போது புதிதாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கும் 130 என்ற அளவில் பார்த்தால், அமெரிக்க மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 46 விழுக்காடு அமெரிக்கர்கள் உயர் இரத்த அழுத்தம் உடையவர்களாகக் கருதப்படுகின்றார்கள்.
ஒரு மனிதனின் இரத்த அழுத்தம் 130/80 என்ற அளவை எட்டிவிட்டாலே, இயல்பு நிலையில் இருப்பவர்களை விட, இருதயத்திற்குச் செல்லும் இரத்தக் குழாய்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் இரு மடங்காக இருப்பதாக அமெரிக்க இருதய சங்கத்தின் இரத்த அழுத்தம் குறித்த வரையறை எழுதியிருக்கும் பால் வெல்டன் கூறுகிறார்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை, தினமும் உடற்பயிற்சி, பத்திய உணவுகள், மது, புகை பழக்கமின்மை மற்றும் மன உளைச்சல் இல்லாமல் இருப்பது இவற்றின் மூலம் இரத்த அழுத்தத்தை 120 என்ற அளவிலேயே வைத்திருக்கலாம்.
இதனால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.