ஜார்ஜ் டவுன் – பினாங்கு மாநிலத்தைச் சேர்ந்த மசீச இளைஞர் பிரிவுத் தலைவர் லிம் சுவீ போக்கில் வீட்டில், இன்று புதன்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் அவரது தாயார், மனைவி மற்றும் இரு குழந்தைகள் பலியாகினர்.
இன்று அதிகாலை 6 மணியளவில் வீட்டில் தீவிபத்து ஏற்பட்ட போது, லிம் சுவீ போக் பணியிடத்தில் இருந்திருக்கிறார்.
ஆனால் வீட்டில் இருந்த அவரது 62 வயதான தாயார், 35 வயதான மனைவி மற்றும் 10, 8 வயதில் பெண் மற்றும் ஆண் குழந்தைகள் என 4 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர்.
தீ சம்பவம் குறித்துத் தகவல் கிடைத்த 8 நிமிடங்களில் தீயணைப்புத் துறை சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், அதற்குள் தீ வீடு முழுவதும் பரவி விட்டதாகவும் லெபு பந்தாய் தீயணைப்புத்துறைத் தலைவர் முகமது ரோசைரி அப்துல் ரஹிம் தெரிவித்திருக்கிறார்.
20 நிமிடங்கள் போராடி 7.10 மணியளவில் தீயை அணைத்த போது, வீட்டின் உள்ளே லிம் சுவீ போக்கின் குடும்பத்தினர் 4 பேரும் தீயில் கருகி இறந்து கிடந்தாகவும் முகமது ரோசைரி குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், அந்த வீட்டில் உள்ளே செல்வதற்கும், வெளியே செல்வதற்கும் ஒரே ஒரு கதவு மட்டுமே இருந்ததால், உள்ளே இருந்தவர்களால் தப்பிக்க முடியவில்லை என்றும் முகமது ரோசைரி தெரிவித்திருக்கிறார்.