கோலாலம்பூர் – எதிர்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானின் பதிவை சங்கங்களின் பதிவிலாகா தாமதப்படுத்துவதற்குத் தான் காரணம் என்ற குற்றச்சாட்டை உள்துறை அமைச்சரான டத்தோஸ்ரீ அகமட் சாஹிட் ஹமீடி மறுத்திருக்கிறார்.
நேற்று திங்கட்கிழமை உள்துறை அமைச்சிற்குச் சென்ற பக்காத்தான் தலைவர்கள், சாஹிட்டைப் பார்க்க முயற்சி செய்தனர்.
ஆனால் உள்துறை அமைச்சைச் சேர்ந்த அதிகாரிகள் சாஹிட்டிற்கு வேறு ஒரு சந்திப்பு இருப்பதால் இப்போதைக்குப் பார்க்க முடியாது என்று திருப்பி அனுப்பினர்.
இந்நிலையில், அது குறித்துக் கருத்துத் தெரிவித்த பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமது, ஜசெக மற்றும் பெர்சாத்து கட்சி இதில் இணைந்திருப்பதால் தான் பக்காத்தான் ஹராப்பான் பதிவைத் தாமதப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்திருக்கும் சாஹிட், “திறந்த மனதோடு, சங்கங்களின் பதிவிலாகா அவர்களைச் (பக்காத்தான் தலைவர்கள்) சந்தித்தது. ஆர்ஓஎஸ் மிகவும் நிபுணத்துவமாக நடந்து கொண்டது” என்று தெரிவித்திருக்கிறார்.