புதுடில்லி – கடும் மழை, கன்னியாகுமரியைக் கடந்த ‘ஓகி’ புயல் ஆகியவற்றின் காரணமாக நடுக்கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களில் 1154 பேரையும், 89 படகுகளுடன் இந்திய இராணுவமும், மீட்புப் படையினரும் காப்பாற்றியுள்ளனர்.
இந்த மீனவர்கள் தமிழகம், கேரளாவைச் சேர்ந்தவர்களாவர். “மீட்கப்பட்ட 1154 மீனவர்கள், 89 படகுகளுடன் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மீனவர்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, கோவா, லட்சத்தீவுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்” என மத்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
மீனவர்களை மீட்பதில் இராணுவ ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டன.
இதற்கிடையில் மகாராஷ்டிரா அரசும் பல கேரள மீனவர்களையும், தமிழக மீனவர்களையும் மீட்டு அவர்களுக்குரிய உதவிகளைச் செய்து வருவதாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்திருக்கிறார்.