திருச்சி – மலேசியாவைச் சேர்ந்த தேவசூரியா என்ற பெண்ணுக்கு, இந்தியாவில் இருந்து வெளியேறத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
தனது 4 வயது மகனுடன் இன்று செவ்வாய்க்கிழமை மலிண்டோ விமானத்தில் வர வேண்டிய அவர், திருச்சி விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
காரணம், அவர் தனது 3 மாத கால விசா காலாவதியான பின்னரும், அதனைப் புதுப்பிக்காமல் இந்தியாவில் தங்கியிருந்திருக்கிறார்.
இதனால் அவரது விமான டிக்கெட்டை மலிண்டோ இரத்து செய்தது.
இதனிடையே, சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தக் குற்றத்திற்காக தேவசூரியாவுக்கு அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், திருச்சி விமான நிலையத்தில் இருந்தபடி, மலேசியாவில் அவருக்கு உதவி செய்யும் அமைப்பிடம் பேசியிருக்கும் தேவசூரியா, திருச்சியிலிருந்து தனது கணவரின் கிராமத்திற்குச் செல்ல 6 மணி நேரங்கள் ஆகும் என்றும், என்ன செய்வதென்று தெரியாமல் தான் நின்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
நாளை தான் இராமநாதபுரத்தில் உள்ள காவல்துறைத் தலைமையகத்திற்குச் சென்று, மலேசியாவுக்குத் திரும்ப தனக்கு அனுமதியளிக்கும் படி கோரிக்கை விடுக்கப்போவதாகக் கூறியிருக்கும் தேவசூரியா, அப்படியே அவர்கள் அனுமதியளித்தாலும் விமான டிக்கெட் வாங்கத் தன்னிடம் காசு இல்லை என்றும் தேவசூரியா குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, தேவசூரியா ஃபேஸ்புக்கில் வெளியிட்ட காணொளி பரபரப்பை ஏற்படுத்தியது. தான் மலேசியாவைச் சேர்ந்தவர் என்றும், தமிழகத்தில் தனது மாமியாரால் மிகவும் கொடுமைப்படுத்தப்படுவதாகவும் கண்ணீர் விட்டு கதறியபடி காணொளி வெளியிட்டிருந்தார்.
இதனையடுத்து, மலேசியாவைச் சேர்ந்த சில அமைப்புகள் அவருக்கு உதவ முன்வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தேவசூரியா இந்தியப் பிரஜையான முரளிதாசை, 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்திருக்கிறார். முரளிதாஸ் மலேசியாவில் மொத்தம் 16 ஆண்டுகள் தங்கியிருந்திருக்கிறார்.
8 ஆண்டுகள் சட்டப்பூர்வ விசாவிலும், திருமணத்திற்குப் பிறகு 8 ஆண்டுகள் சட்டவிரோதமாகவும் தங்கியிருந்திருக்கிறார்.
இதனால், அவர் மலேசியாவிற்குள் நுழைய முடியாதபடி, 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.