கோலாலம்பூர் – தமிழகத்தில் இருந்து மலேசியாவுக்குத் திரும்ப இயலாமல் தனது 4 வயது மகனுடன் சிக்கித் தவிக்கும் கோலாலம்பூரைச் சேர்ந்த தேவசூரியா என்ற பெண்ணுக்கு, மலிண்டோ விமான நிறுவனம் உதவி செய்ய முன்வந்திருக்கிறது.
3 மாத காலம் விசா முடிந்து தமிழகத்தில் சட்டவிரோதமாக 17 நாட்கள் தங்கியதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அபராதம் விதித்த குடிநுழைவு அதிகாரிகள், அவர் மலேசியாவுக்குத் திரும்பவும் தடை விதித்தனர்.
இதனால் முன்பதிவு செய்திருந்த மலிண்டோ விமானத்தைத் தவறவிட்டார் தேவசூரியா.
இந்நிலையில், நேற்று இந்திய மதிப்பில் 2000 ரூபாய் அபராதம் செலுத்தியதையடுத்து அவர் நாடு திரும்ப அனுமதியளிக்கப்பட்டது.
என்றாலும், மீண்டும் விமான டிக்கெட் வாங்க காசு இல்லாமல் தவித்த தேவசூரியாவுக்கு மலிண்டோ உதவி செய்வதாக கூறியிருக்கிறது.
இதனையடுத்து தேவசூரியா விரைவில் மலேசியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழகத்தைச் சேர்ந்த முரளிதாஸ் என்பவரைத் திருமணம் செய்திருக்கும் தேவசூரியா, தன்னை தனது மாமியார் அடித்துத் துன்புறுத்துவதாக அண்மையில் ஃபேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டார்.
இதனையடுத்து அவருக்கு உதவி செய்ய மலேசியாவில் இருந்து சில அமைப்புகள் நடவடிக்கைகள் எடுத்தன என்பது குறிப்பிடத்தக்கது.