கோலாலம்பூர் – நாளை சனிக்கிழமை டிசம்பர் 16-ஆம் தேதி காலை தொடங்கி மாலை வரை செர்டாங்கிலுள்ள மலேசிய விவசாய கண்காட்சி மையத்தில் நடைபெறவிருக்கும் மஇகாவின் தொகுதிகளின் பொறுப்பாளர்களின் மாபெரும் பொதுக் கூட்டம் 14-வது பொதுத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து விவாதிக்கவிருக்கிறது.
இந்தப் பொதுக் கூட்டத்தில் 14-வது பொதுத் தேர்தல் குறித்த ஏற்பாடுகள், ஆயத்தப் பணிகள், ஆகியவை குறித்து நாடு முழுமையிலுமிருந்து திரளும் தொகுதிகளின் பொறுப்பாளர்கள் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தலைமையில் கலந்துரையாடல் நடத்தி விவாதிக்கவிருக்கின்றனர்.
இந்த கலந்துரையாடல் கூட்டத்தின் முக்கிய அம்சமாகவும், மைய அம்சமாகவும் பார்க்கப்படுவது, கூட்டத்தின் இடைவேளையின்போது பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கும் மத்திய செயலவைக் கூட்டமாகும்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் இறுதிக்கட்ட ஒற்றுமை நடவடிக்கையாக, மஇகா பத்து தொகுதியின் முன்னாள் தலைவர் ஏ.கே.இராமலிங்கம் தலைமையிலான மஇகா கிளைகள் மீண்டும் மஇகாவில் இணைவது குறித்த அறிவிப்பு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏ.கே.இராமலிங்கம் குழுவினர் தொடுத்த வழக்கு கூட்டரசு நீதிமன்ற மேல்முறையீட்டுக்கு கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கு தொடுத்த, ஏ.கே.இராமலிங்கம், டத்தோ ஹென்ரி பெனடிக் ஆசீர்வாதம், டத்தோ இராஜூ ஆகியோர் அந்த வழக்கை மீட்டுக் கொண்டிருப்பதாக நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.
எனினும் வாதிகளான சங்கப் பதிவகம் மற்றும் மஇகா சார்பில் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து அந்த வழக்கு தொடர்ந்து நடத்தப்பட்டு, வாதிகள் தரப்புக்கு சாதகமாக தீர்ப்பும் வழங்கப்பட்டது.
அடுத்த ஆண்டு (2018) மஇகாவின் தேர்தல் ஆண்டு என்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள், மஇகாவின் புதிய உறுப்பினர்கள், பதிவு செய்யப்பட்ட கிளைகள் தங்களின் உறுப்பினர் சந்தா கட்டணங்களைச் செலுத்தி விட வேண்டும்.
அந்த அடிப்படையில் இன்று டிசம்பர் 15-ஆம் தேதியோடு மஇகா கிளைகள் தங்களின் புதிய உறுப்பினர்களின் பட்டியலையும், அதற்குரிய சந்தாக் கட்டணங்களையும் செலுத்தியாக வேண்டும்.
எதிர்வரும் டிசம்பர் 28-ஆம் தேதிக்குள் மஇகா கிளைகள் தங்களின் 2018-ஆம் ஆண்டுக்கான உறுப்பினர் சந்தாக் கட்டணங்களை செலுத்திவிட வேண்டும் என மஇகா தலைமைச் செயலாளர் டத்தோ ஏ.சக்திவேல் ஓர் அறிக்கையின் வழி அறிவித்திருக்கிறார்.
இந்நிலையில், 14-வது பொதுத் தேர்தல் பணிகளுக்கான பட்டறையாகவும், ஆயத்தப் பணிகளுக்கான கலந்துரையாடல் களமாகவும் எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறும் கூட்டத்தின் மைய அம்சமாகத் திகழப் போவது அந்தக் கூட்டத்தின் இடையில் நடைபெறப் போகும் மஇகா மத்திய செயலவைக் கூட்டமாகும்.
சனிக்கிழமை (16 டிசம்பர் 2017) மதியம் 1.30 மணியளவில் மத்திய செயலவை நடைபெறும் என மத்திய செயலவை உறுப்பினர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
எனவே, இந்த மத்திய செயலவைக் கூட்டத்திலேயே ஏ.கே.இராமலிங்கம் குழுவினர் – அவர்கள் தரப்பு மஇகா கிளைகள் – மீண்டும் கட்சியின் இணைவதற்கான அறிவிப்பும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-இரா.முத்தரசன்