செர்டாங் – இன்று சனிக்கிழமை இங்குள்ள விவசாயக் கண்காட்சி மையத்தில் காலை முதல் மாலை வரை மஇகாவின் தொகுதிப் பேராளர்கள் கலந்து கொண்ட 14-வது பொதுத் தேர்தலுக்கான பட்டறையும், ஆயத்தப் பணிகளுக்கான கலந்துரையாடலும் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் இடைவேளையின்போது பிற்பகல் 1.30 மணியளவில் மஇகாவின் மத்திய செயலவைக் கூட்டமும் நடைபெற்றது.
சில முக்கிய விவகாரங்கள் இந்த மத்திய செயலவைக் கூட்டத்தில் இடம் பெற்றதாகவும், குறிப்பாக கட்சிக்கு வெளியே இருப்பவர்களை மீண்டும் கட்சிக்குள் சேர்ப்பது குறித்தும், அவர்களின் உறுப்பியத்தை தொடர்ச்சியாக நீட்டிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகும் நோக்கில் சில சட்டவிதித் திருத்தங்கள் அவசியமாக இருப்பதால், விரைவில் சிறப்புப் பொதுப் பேரவை கூட்டப்பட முடிவெடுக்கப்பட்டதாகவும், மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் மஇகா பொதுப் பேரவையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட புதிய சட்டவிதித் திருத்தங்களின்படி தேசிய நிலையிலான தலைவர்கள் மற்றும் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்களுக்கான பதவிகளுக்குப் போட்டியிடுபவர்கள் மஇகாவில் தொடர்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும்.
இந்நிலையில் கட்சிக்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் கட்சிக்குள் அனுமதிக்கப்பட்டாலும், சில ஆண்டுகாலம் அவர்கள் கட்சிக்கு வெளியே இருந்ததால், அவர்கள் சில பதவிகளுக்குப் போட்டியிடுவதில் சட்டரீதியிலான சிக்கல்கள் எழலாம்.
இதனைச் சரிசெய்யும் நோக்கிலும், அவர்களுக்கும் கட்சிக்கான தேர்தல் களத்தில் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும், மஇகா சட்டவிதிகளில் சில திருத்தங்கள் செய்ய விரைவில் சிறப்புப் பொதுப் பேரவை ஒன்றைக் கூட்டி, அந்த பொதுப்பேரவையில் இதற்கான சட்டதிருத்தங்களைக் கொண்டு வந்து, தேவைப்படும் மாற்றங்களை மேற்கொள்ள மஇகா மத்திய செயலவை முடிவெடுத்துள்ளது.