செர்டாங் – இன்று சனிக்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் செர்டாங் விவசாயக் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் முன்னாள் பொருளாளர் டத்தோ ஆர்.இரமணன் மீண்டும் கட்சியில் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளும் முடிவு எடுக்கப்பட்டதாக மஇகா வட்டாரங்கள் தெரிவித்தன.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மஇகா தேசியத் தலைவரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட டத்தோ ஆர்.இரமணன், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் இணைந்து கொள்வதற்கான மேல்முறையீட்டை சமர்ப்பித்திருந்தார்.
அந்த மேல்முறையீடு மீதான விவாதம் ஏற்கனவே மத்திய செயலவையில் விவாதிக்கப்பட்டு, பின்னர் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று சனிக்கிழமை ஒருநாள் கூட்டமாக செர்டாங் விவசாயக் கண்காட்சி மையத்தில் நடைபெற்ற 14-வது பொதுத் தேர்தலுக்கான சிறப்புப் பட்டறையின் இடைவேளையில் மதியம் 1.30 மணியளவில் நடைபெற்ற மஇகா மத்திய செயலவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மஇகா வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
மீண்டும் கட்சியின் கிளைத் தலைவராக மட்டும் தனது பொறுப்பில் இருந்து பணியாற்றப் போவதாக ஆர்.இரமணன் தனது மேல்முறையீட்டில் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கேற்பவே அவர் இன்று கட்சியில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.