மாலி – இரண்டு நாட்கள் அதிகாரப்பூர்வப் பயணமாக மாலத்தீவு சென்ற மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஹுல்ஹுலேவில் உள்ள வேலனா அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் (மலேசிய நேரப்படி இரவு 7.50 மணியளவில்) தமது சிறப்பு விமானத்தில் தரையிறங்கிய, நஜிப் மற்றும் அவரது துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மான்சோரை, மாலத்தீவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் முகமது அசிம், உள்துறை அமைச்சர் அஸ்லீன் அகமட் ஆகியோர் வரவேற்றனர்.
நஜிப்புடன் மலேசிய அமைச்சர்கள் டத்தோஸ்ரீ ச.சுப்ரமணியம், டத்தோஸ்ரீ முஸ்தபா முகமது, டான்ஸ்ரீ நோ ஓமார், டத்தோஸ்ரீ இட்ரிஸ் ஜோசுவா மற்றும் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரிசால் மரிக்கான் ஆகியோரும் இப்பயணத்தில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
மாலத்தீவு இராணுப் படையினரின் அணிவகுப்பும் மரியாதையும் பிரதமர் நஜிப் மற்றும் அமைச்சர்களுக்கும் அளிக்கப்பட்டது.
பின்னர், அங்கிருந்து படகு மூலம் குரும்பா என்ற இடத்திற்கு நஜிப், ரோஸ்மா மற்றும் அமைச்சர்களும், மலேசிய அரசாங்க அதிகாரிகளும் அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தங்க வைக்கப்பட்டனர்.
இன்று புதன்கிழமை மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் காயூமை, பிரதமர் நஜிப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
இச்சந்திப்பில் மலேசியாவுக்கும், மாலத்தீவுக்கும் இடையிலான் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மாலத்தீவு செல்வதற்கு முன்னதாக, நேற்று இலங்கையில் நஜிப் தனது சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.