Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘வேலைக்காரன்’ – முதலாளிகளுக்குப் பாடம்! தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு!

திரைவிமர்சனம்: ‘வேலைக்காரன்’ – முதலாளிகளுக்குப் பாடம்! தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு!

1582
0
SHARE
Ad

velaikkaran-sivakarthikeyan_640x480_71496997210.jpgகோலாலம்பூர் – மார்க்கெட்டிங்.. நமக்கு அத்யாவசியம் இல்லாத பொருளைக் கூட ஆசை காட்டி, நம்ப வைத்து, சலுகைகள் கொடுத்து நம் வீட்டிற்குள் புகுத்திவிடும்.

அதிலும், இன்று நம்மைப் பெரும்பாலும் ஆக்கிரமித்திருப்பது கலர் கலராக கண்களுக்குக் குளிர்ச்சியாக விற்கப்படும் உணவுப் பொருட்கள்.

ஆனால், நாம் நம்பி வாங்கும் அப்பொருட்கள் தரமானதா? உடலுக்கு நல்லதா? என்பதை, நோய் வரும் வரை யோசிப்பதே இல்லை.

#TamilSchoolmychoice

இப்படி தரமில்லாத பொருட்களை தயாரிக்கத் தூண்டுவது யார்? அரசாங்கமா? அனைத்துலக அங்கீகாரம் பெற்ற பெருநிறுவனங்களா? அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் வேலைக்காரர்களா? அல்லது அதனை வாங்கும் கன்ஸ்யூமர் என்று சொல்லப்படும் வாடிக்கையாளர்களா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் மிக அழகாக தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கும் படமாக வெளிவந்திருக்கிறது ராஜா மோகன் இயக்கத்தில், சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் வெளிவந்திருக்கும், ‘வேலைக்காரன்’.

மார்க்கெட்டிங் குறித்து எளிய மக்களுக்கும் புரியும் படியாக திரைக்கதை அமைப்பாலும், வசனங்களாலும் கவனிக்க வைத்திருக்கும் இயக்குநர் ராஜா மோகனுக்கு நிச்சயம் பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும்.

சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதற்குப் பின்னால் இருக்கும் மார்க்கெட்டிங் தந்திரம் குறித்த அந்த ஒரு காட்சி போதும், மக்களின் கண்களைத் திறக்க..

அதேவேளையில், இப்போதுள்ள குழந்தைகள் வயிற்றுப் பசிக்கா சாப்பிடுகிறார்கள்? கண்களால் ஈர்க்கப்படும் கலர் கலர் உணவுப் பொருட்களுக்காகத் தான் சாப்பிடுகிறார்கள் என்று சொல்லி, இன்றைய பெற்றோருக்கும் ஒரு மிகப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

Velaikaaranஅதற்கேற்ப சிவகார்த்திகேயன் தனது நடிப்பால் ஈர்க்கிறார். குப்பத்து இளைஞராக ‘குப்பம் எஃப்எம்’ அறிவுடன் பேசுங்கள் நிகழ்ச்சியில் தொடங்கி, ஃபஹத் பாசிலிடம் மார்க்கெட்டிங் கற்றுக்கொள்வது, பின்னர் உண்மை அறிந்து தரமில்லாப் பொருட்களைத் தயாரிக்கும் முதலாளிகளிடம் மன்றாடுவது வரை நடிப்பில் அபாரம்.

நயன்தாராவின் பங்கு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரது பங்கு படத்தில் குறைவு தான். பார்ப்பதற்கும் பளிச்சென இல்லாதது போல் தெரிந்தது. என்றாலும், ஒரு சில இடங்களில் தனது முகபாவனைகளால் காட்சிக்கு வலு சேர்க்கிறார்.

ஃபஹத் பாசில் அருமையான நடிப்பு. சவாலான நடிப்பும் கூட.. இரண்டு விதமாக நடிக்க வேண்டும். அதனை சிறப்பாக செய்திருக்கிறார்.

அதேபோல், சினேகா வரும் காட்சிகள் நிச்சயமாக ஒவ்வொரு பெற்றோருக்கும் அடிவயிற்றைப் பிசைந்து, விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

இவர்கள் தவிர, படத்தில் பிரகாஷ்ராஜ், சரத்லோகிதாஸ், சார்லி, ரோஹினி, ரோபோ ஷங்கர், ஆர்.ஜே.பாலாஜி, காளி வெங்கட், ராமதாஸ், அருள் தாஸ், மன்சூர் அலிகான், ஒய்ஜி.மகேந்திரா, தம்பி இராமையா, விஜய் வசந்த் என ஒரு நட்சத்திரப் பட்டாளமே இருந்தாலும் கூட எல்லோருக்குமே மனதில் நிற்கும் படியான வசனங்களும், காட்சிகளும் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.

“என் குழந்தைக்கு நானே கொஞ்சம் கொஞ்சமா விஷத்தை வாங்கிக் கொடுத்திருக்கேன்”

“உலகின் மிகச் சிறந்த சொல் ‘செயல்'”

“தப்பான மொதலாளி சொல்றத விசுவாசம் என்ற பெயர்ல அப்படியே செய்யுற வேலைக்காரர்கள், அவங்க தயாரிக்குற பொருளை நம்பி வாங்குற கன்ஸ்யூமருக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம்”

“நாம தீவுன்னு நெனச்சு இவ்வளவு நாளா திமிங்கிலத்தின் முதுகு மேலையே உட்கார்ந்து இருந்திருக்கோம்”

இப்படியாக நெற்றிப் பொட்டில் அறையும் வசனங்கள் பல.

Fahad-and-Sivaபடத்தின் தொடக்கமே மிக இனிமையாக இருக்கிறது. குப்பம் எஃப்எம் திறப்பு விழாவில் ரிப்பனுக்குப் பதிலாக கம்பியை வைத்து, வெல்டிங் தொழிலாளியான அப்பா சார்லியை வெட்டச் சொல்லுவது, குப்பத்து தாதா பிரகாஷ்ராஜை சமயோஜிதமாக எதிர்கொள்வது, 12 மணிக்கு விளக்கும் போட்டு ஆதரவுக் காட்டச் சொல்லும் ஐடியா எல்லாமே புதிதாகவும் ஈர்க்கும் வகையிலும் உள்ளது. அதற்கு காமெடியும், ஹீரோயிசமும் கலந்த சிவா கனக்கச்சிதப் பொருத்தம்.

படம் பார்ப்பவர்களுக்கு மார்க்கெட்டிங் மீது ஈர்ப்பும், ஊக்கமும் வரும் வகையில் காட்சிகள் இருப்பதோடு, அதே மார்க்கெட்டிங் எந்த அளவுக்கு தரமில்லாத பொருட்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கிறது என்பதையும் பொட்டில் அறைந்தார் போல் சொல்லியிருக்கிறது படம்.

என்றாலும், இரண்டாம் பாதியில் சற்று நீளம் அதிகமாக இருப்பதாகத் தோன்றுவதைத் தடுக்க முடியவில்லை. பல இடங்களில் கத்தரி வேலை செய்யப்படாமல் இருந்திருக்கிறது.

முதல் பாதியில் ஃபஹத் பாசில் எதையோ பெரிதாகச் செய்யப் போவதாகக் காட்டிவிட்டு, இரண்டாம் பாதியில் அவரது கதாப்பாத்திரத்தின் வீரியத்தினை குறைத்துவிட்டது போல்  தோன்றுகிறது.

போர்டு மீட்டிங்கை கண்ணாடிப் பேழைகளால் ஆன மிகப் பெரிய கட்டிடத்தில் வைத்துக் காட்டி அந்நிறுவனம் பற்றி ரசிகர்களின் எண்ணத்தை மிக அகலமாக விரித்துவிட்டு, கடைசியில் அந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியை ஒரு 500, 600 தொழிலாளர்களைக் காட்டித் தேர்ந்தெடுப்பது கொஞ்சம் நெருடலாக இருக்கிறது.

அனிருத்தின் இசை.. ‘எழு வேலைக்காரா’, ‘இறைவா’ பாடல் அவ்வளவு இனிமையும், உற்சாகமும் தருகிறது. ஆனால் அப்பாடல்கள் சரியான இடத்தில் பயன்படுத்தாது போல் தோன்றுகிறது. பின்னணி இசையிலும் அனிருத் தெரிய மறுக்கிறார். ராம்ஜியின் ஒளிப்பதிவு அருமை.

மற்றபடி, ‘வேலைக்காரன்’ –  முதலாளிகளுக்குப் பாடம்! தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு! வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

-ஃபீனிக்ஸ்தாசன்