Home நாடு போதைப் பொருள் கடன்தான் பெட்ரோல் நிலையக் கொலைக்குக் காரணமா?

போதைப் பொருள் கடன்தான் பெட்ரோல் நிலையக் கொலைக்குக் காரணமா?

894
0
SHARE
Ad
Wan Ahmad Najmuddin-crime-bk aman
டத்தோஸ்ரீ வான் அகமட் நஜ்முடின் முகமட்

ஜோகூர் பாரு – கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி ஜோகூர் பாருவில் தாமான் பெலாங்கியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரின் கொலையில் இதுவரை கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்தக் கைதுகளைத் தொடர்ந்து இந்தப் படுகொலை தொடர்பான மர்மங்கள் விலகும் என காவல் துறையினர் கருதுகின்றனர்.

ஆகக் கடைசியாக நேற்று 22 வயதுடைய நபர் ஒருவரைக் காவல் துறையினர் ஜோகூர் பாருவில் கைது செய்தனர். இவரோடு சேர்த்து 4 பெண்களையும், 16-க்கும் 26-க்கும் இடைப்பட்ட வயதுடைய 10 ஆண்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஜோகூர் பாரு தவிர்த்து சிங்கப்பூர், பினாங்கு ஆகிய இடங்களிலும் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

இதற்கிடையில் இந்தக் கொலைக்கான காரணம் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான கடன் பாக்கி வசூலிப்பு விவகாரமாக இருக்கலாம் என காவல் துறையினர் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் ஆணையர் (கமிஷனர்) டத்தோஸ்ரீ வான் அகமட் நஜ்முடின் முகமட் சம்பந்தப்பட்ட இரகசியக் குண்டர் கும்பல்கள் போதைப் பொருள் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர் எனக் கூறியுள்ளார்.

முதல் கட்ட விசாரணைகளின் வழி, கொல்லப்பட்ட 40 வயதைத் தாண்டிய நபர் இரகசியக் கும்பல் நடவடிக்கையில் தீவிரமாக இயங்கி வந்தவர் என்பதும், இந்தக் கொலைக்கான பின்னணியில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பான கடன் காரணமாக இருந்தது தெரிய வந்திருப்பதாகவும் வான் அகமட் மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் பொதுமக்கள் காவல் துறையின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என்றும் வருகை தரும் சிங்கப்பூரியர்களுக்கும் வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகளுக்கும் ஜோகூர் பாரு இன்னும் பாதுகாப்பான நகராகத் திகழ்கிறது எனவும் வான் அகமட் உறுதியளித்துள்ளார்.