சென்னை – அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ் செல்வன், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காணொளியை வெளியிட்ட சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், வி.பி.கலைராஜன், நாஞ்சில் சம்பத், சி.ஆர்.சரஸ்வதி, புகழேந்தி ஆகிய அதிமுக பிரமுகர்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டதாக எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர் செல்வம் தலைமைத்துவம் அறிவித்துள்ளது.
இவர்கள் அனைவரும் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இதுவரை செயல்பட்டு வந்தாலும், இவர்கள் மீது இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
நேற்று திங்கட்கிழமை கூடிய அதிமுக செயற்குழுக் கூட்டம் இந்த முடிவை அறிவித்தது.
எனினும், நீதிமன்றத்தில் அதிமுக கட்சித் தலைமை யாருக்கு என்பது குறித்த வழக்கு இன்னும் நடைபெற்று வருவதால், கட்சியிலிருந்து ஒருவரை நீக்கும் உரிமை நடப்பு தலைமைத்துவத்திற்கு இல்லை என தங்கத் தமிழ் செல்வன் அறிவித்திருக்கிறார்.
ஜெயலலிதா உயிருடன் இருந்த காலத்திலேயே அவருக்கு எதிரான நிலைப்பாடு எடுத்த இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் (ராஜ்ய சபா) சசிகலா புஷ்பா நேற்று திங்கட்கிழமை யாரும் எதிர்பாராதவிதமாக டிடிவி தினகரனைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். கடந்த காலங்களில் சசிகலா புஷ்பா சசிகலா நடராஜன் அணியினருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.