கோலாலம்பூர் – ஜசெக மூத்தத் தலைவர் லிம் கிட் சியாங்கின் இடது கிட்னியில் இருந்த புற்றுநோய் கட்டி, கடந்த வாரம் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக அவரது மகனும், ஜசெக பொதுச்செயலாளருமான லிம் குவான் எங் அறிவித்திருக்கிறார்.
“வழக்கமான மருத்துவப் பரிசோதனையில் அவரது இடது கிட்னியில் சிறிய கட்டி ஒன்று இருந்தது கண்டறியப்பட்டது. அது புற்றுநோயின் முதல் நிலைக் கட்டி எனத் தெரியவந்தது” என்று லிம் குவான் எங் இன்று புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
தற்போது அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து தற்போது கிட் சியாங் நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் இயல்பு நிலைக்குத் திரும்புவார் என்றும் லிம் குவான் எங் தெரிவித்தார்.
தற்போது கிட் சியாங்கின் நாடாளுமன்றப் பணிகள் அனைத்தையும், அவரது பிரதிநிதிகளான நங் சியாம் லுவாங்கும், கேலாங் பாத்தா ஜசெக அலுவலகமும் பார்த்துக் கொள்வதாகவும் லிம் குவான் எங் குறிப்பிட்டார்.