ஜோகூர் பாரு – இங்குள்ள தாமான் பெலாங்கி பெட்ரோல் நிலையம் ஒன்றில் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி கொல்லப்பட்ட இரகசியக் கும்பலைச் சேர்ந்த 44 வயது கொண்ட நபர் ஒருவரின் கொலையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ காரை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
பொந்தியான் வட்டாரத்திலுள்ள ஆயர் பாலோய் என்ற இடத்தில் உள்ள செம்பனைத் தோட்டம் ஒன்றில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக ஜோகூர் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் காலில் காதர் முகமட் தெரிவித்திருக்கிறார்.
அந்தக் காரில் அதன் பதிவு எண் பொருத்தப்பட்டிருக்கவில்லை என்றும் டத்தோ முகமட் இன்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.
அந்த கொலைச் சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட அந்தக் கார் நேற்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 26) பிற்பகல் 3.00 மணிக்கு பொதுமக்களால் காணப்பட்டு, காவல் துறையினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட 15 பேரில் 4 பேரைக் காவல் துறையினர் விடுதலை செய்துள்ளனர் என்றும் டத்தோ முகமட் தெரிவித்தார்.
இந்தக் கொலை தொடர்பில் மேலும் 3 சந்தேகப் பேர்வழிகளை காவல் துறையினர் தேடி வருவதாகவும் காவல் துறையினர் அறிவித்திருக்கின்றனர்.
கொலை செய்யப்பட்ட நபர் அவரது காரிலிருந்து வெளியே இழுத்து வெளியே கொண்டுவரப்பட்டு, கத்தியால் குத்தப்பட்ட பின்னர், ஒரு வெள்ளை நிற பி.எம்.டபிள்யூ கார் தரையில் கிடந்த அவர் மீது ஏற்றப்பட்டதில், அவர் மரணமடைந்தார். அந்த வெள்ளை நிறக் காரைத்தான் நேற்று காவல் துறையினர் கண்டெடுத்துக் கைப்பற்றியிருக்கின்றனர்.