Home நாடு ‘2018- இந்தியர்களின் மறுமலர்ச்சி ஆண்டாக உருமாற்றுவோம்’ – டாக்டர் சுப்ரா

‘2018- இந்தியர்களின் மறுமலர்ச்சி ஆண்டாக உருமாற்றுவோம்’ – டாக்டர் சுப்ரா

1152
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் திட்டத்தின் துணையோடு, இன்று மலர்கின்ற 2018 ஆண்டை மலேசிய இந்தியர்களின் மறுமலர்ச்சி ஆண்டாக உருமாற்ற உறுதி பூணுவோம் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்பிரமணியம் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

subra-2018 message-banner“பல்வேறு நம்பிக்கைகளோடும், இன்பமும் ஏற்றமும் கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்புகளோடும் மலரும் 2018 புத்தாண்டை உங்களோடு சேர்ந்து வரவேற்கும் இந்த வேளையில் அனைவருக்கும் வளமான, நலமான புத்தாண்டு அமைவதற்கு எனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் ஒவ்வொரு ஆண்டும் மறக்க முடியாத பல கசப்பான, பல இனிமையான சம்பவங்களை வாழ்க்கைப் பாடங்களாகத் தந்து விட்டு நம்மிடமிருந்து விடைபெறுகிறது” எனவும் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருக்கிறார்.

புளுபிரிண்ட் திட்டம் மூலம் மறுமலர்ச்சி காண்போம்

தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் டாக்டர் சுப்ரா பின்வருமாறு மேலும் தெரிவித்திருக்கிறார்:

#TamilSchoolmychoice

“அந்த வகையில், மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் 2017-ஆம் ஆண்டு என்றென்றும் நினைவில் கொள்ளப்படும் ஆண்டாகத் திகழும் வண்ணம், மஇகாவின் நீண்டகாலப் போராட்டத்தின் விளைவாக, மலேசிய இந்தியர் புளுபிரிண்ட் எனப்படும் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்கான ‘மலேசிய இந்தியர் பெருவியூகத் திட்டம்’ நமது பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் அவர்களால் கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில் பிரதமர் அறிவித்த 2018-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் (பட்ஜெட்) இந்தியர்களுக்கான பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.

blueprintநமது கோரிக்கைகளில் இன்னும் சில பரிசீலனையில் இருக்கின்றன – அவை சில அரசியல், அரசாங்கக் காரணங்களால், நடைமுறைச் சிக்கல்களால் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இருக்கின்றன. அவையும் விரைவில் ஏற்றுக் கொண்டு அறிவிக்கப்பட இந்தியர்களின் சார்பில் மஇகா தொடர்ந்து போராடி வரும் என்ற உறுதிமொழியையும் இந்த வேளையில் வழங்குகிறேன்.

மலரப் போகும் 2018-ஆம் ஆண்டில், பெருவியூகத் திட்டத்தின் அமுலாக்கப் பணிகளில் கவனம் செலுத்தவிருக்கின்றோம். இந்தத் திட்டத்தின் வெற்றி என்பது நாம் செலுத்துகின்ற ஈடுபாடு, தருகின்ற ஒத்துழைப்பு, அதைச் செயல்படுத்த நாம் காட்டப் போகின்ற தீவிரம் ஆகியவற்றின் அடிப்படையில்தான் அமையும். இதை நான் பலமுறை வலியுறுத்தியிருக்கின்றேன்.

malaysian-indian-blue-print-launchபெருவியூகத் திட்டம் என்பது நமது உரிமை – அதற்கான பாதை போடப்பட்டிருக்கின்றது. அதில் பயணம் செய்து, அதை வெற்றிப் பயணமாக உருமாற்ற வேண்டிய ஆற்றலும், உழைப்பும் இந்தியர்களாகிய நம் கையில்தான் இருக்கின்றது.

எனவே, பெருவியூகத் திட்டத்தின் அமுலாக்கம், தமிழ்ப் பள்ளிகளின் உருமாற்றம், கல்வியில் முன்னேற்றம், பொருளாதார ஏற்றம் – இவற்றின் செயலாக்கங்களின் துணை கொண்டு சமூகத்தில் உருமாற்றம் என திட்டமிட்டுச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் மஇகா 2018-ஆம் ஆண்டை இந்தியர்களின் மறுமலர்ச்சி ஆண்டாக நிறைவேற்றிக் காட்ட உறுதி பூண்டிருக்கிறது.

அதற்கான ஒத்துழைப்பை இந்தியர்கள் எங்களுக்கு வழங்க வேண்டும் என இந்த வேளையில் கேட்டுக் கொள்கிறேன்”

சுகாதார அமைச்சின் மக்கள் நலன் பயக்கும் திட்டங்கள்

ministry--of-health“கடந்த சில ஆண்டுகளாக நான் பொறுப்பேற்றிருக்கிற சுகாதார அமைச்சின் மூலம், நமது பிரதமரின் வழிகாட்டுதலின்படி பல்வேறு மக்கள் நலன் பயக்கும் செயல்திட்டங்களை வடிவமைத்து அமுல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டங்களின் பயன்பாடுகள் மற்றும் மக்களுக்கு இந்தத் திட்டங்களின் மூலமான நன்மைகள் எவ்வாறு சென்றடைந்திருக்கின்றன என்பது போன்ற முடிவுகளை நமக்கு எடுத்துக் காட்டும் ஆண்டாகவும் 2018 திகழும் என நம்பிக்கைக் கொண்டிருக்கிறோம்” எனவும் தான் அமைச்சுப் பொறுப்பு வகிக்கும் சுகாதார அமைச்சின் திட்டங்கள் குறித்தும் டாக்டர் சுப்ரா தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் விளக்கியிருக்கிறார்.

“இதன் மூலம் சுகாதார அமைச்சின் மக்கள் நலன் பயக்கும் திட்டங்களை மேலும் செம்மையாகத் திட்டமிட்டு செயல்படுத்த முடியும் என்பதோடு, கிடைக்கின்ற கருத்துகள் மூலம் தேவையான மாற்றங்களையும் இந்தத் திட்டங்களில் செய்து கொள்ள முடியும்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“இந்த சிந்தனைகளோடு, மலர்கின்றன 2018 புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் வளங்களையும், நலன்களையும், ஏற்றங்களையும் கொண்டுவர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனவும் டாக்டர் சுப்ரா வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.